politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

13.3.12

வெளிச்சம் தரும் சில காப்பீடுகள்

காப்பீட்டு நிறுவனங்கள் எங்கே எதை காப்பீடு செய்யலாம் என்று தான் சுற்றி வருகின்றனர்... சிறு வயதில் ஒரு நடிகை தன மூக்கை காப்பீடு செய்ததை எண்ணி சிரித்திருக்கிறேன்... அணு உலை விவாதங்கள் உச்சத்தில் இருக்கும் நேரத்திலும், இது வரை யாருமே எடுத்து வைக்காத முக்கியமான கோணத்தை இங்கு என் நண்பரான ஒரு காப்பீட்டு முகவருடன் நடந்த விவாதங்களில் சிலவை மூலம் இங்கு ஒரு பேட்டி போல் உங்கள் முன் வைக்கப் படுகிறது.. [சில சமயங்களில் ஆங்கில வார்த்தைகள் கலக்க கூடாது என்பதற்காக கொஞ்சம் இலக்கியத் தமிழாக உரை நடை மாறும்.. பொறுத்துக் கொள்ளுங்கள் தோழர்களே]

நண்பர்:  பாலிசி போடு, பாலிசி போடுன்னு நானும் கரடியா கத்துறேன், நீயும் தப்பிச்சுகிட்டே வர... மார்ச் வருது, எனக்கும் டார்கெட் முடிக்கணும், நீயும் வருமான வரி கணக்கு கட்டனும் அதனால ஒரு நல்ல பாலிசி சொல்றேன். போடு.

நான்:      பாலிசி போடுறேன். ஆனா நான் கேட்க்கும் கேள்விக்கு எல்லாம் நீ கரக்டா பதில் சொல்லணும். எங்கேயாவது தெரியல, புரியல அப்படின்னு நழுவிடலாம்னு பார்த்தா, பொலிசியும் நழுவிடும்.. சரியா?

நண்பர்: இது என்னடா திருவிளையாடல் நாகேஷ் கணக்கா இருக்கு... சரி கேட்டு தொலை.. முயற்சி பண்றேன்.

நான்:      இப்ப நான் வந்து ஒரு அணு உலையில் வேலை செய்வதாய் வச்சுக்குவோம்.   அப்ப எனக்கு நீ பாலிசி போடுவியா.

நண்பர்: போடுவோம். ஆனா நீ அடுத்து அடுத்து என்ன கேக்கப் போறன்னு தெரியுது. அதனால் இதோட நிறுத்திக்கலாமே.

நான்:      ஆட்டம்னு வந்துட்டா ஆடிடணும் தலைவரே. இப்படி ஜகா வாங்க கூடாது.

நண்பர்: சரி மேலே கேளு...

நான்:       accident benefit rider வேணும் என்றால் போலிசி யில் இடம் இருக்கிறதா...

நண்பர்: இருக்குப்பா, ஆனா அது வெறும் வண்டியில் செல்லும் போது நிகழும் விபத்துக்கு மட்டும் தான்...

நான்:      ஒரு வேலை அணு உலை விபத்தால் பாதிக்கப் பட்டு, கதிரியக்கப் பாதிப்பால் எனக்கு புற்றுநோய் வந்ததாக மருத்துவர் சான்றிதழ் வாங்கி தந்தாள் எனக்கு விபத்து காப்பீடு கிடைக்குமா?

நண்பர்: இதுக்கு நீ நேரடியாவே கேட்டிருக்கலாம்.. அணு உலை விபத்தால் நீ பாதிக்கப் பட்டால் அது விபத்தால் பாதிக்கப் பட்டதாக எடுத்துக் கொள்ளப் படாது..

நான்:      ஏன்?

நண்பர்: ஏன் என்றால், முன் கூட்டியே நடக்கும் என்று தீர்மானிக்கப் பட்ட ஒன்றுக்கு காப்பீடு என்று ஒன்று கிடையாது தோழர்.

நான்:     அப்படி என்றால் அணு உலை விபத்து என்பதே நடக்காது என்று கூறுவது...

நண்பர்: இந்த கேள்வியை என்னிடம் கேட்கக் கூடாது, யார் சொல்றார்களோ அவர்களிடம் கேட்க வேண்டும். ஆனால் காப்பீடு நிறுவனங்களை பொறுத்தவரை  அணு உலை என்பது விபத்துக்கு உள்ளாகும் என்று தான் கணக்கில் வைத்திருப்பதாக எனக்கு படுகிறது...

நான்:      சரி சரி, இதுக்கு மேல ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டுக் கொள்கிறேன்...

நண்பர்: தப்பிச்சுட்டேன்

நான்:      பெருமைப் படாதே... முக்கியமான கேள்வியே இது தான்..

நண்பர்: சரியாப் போச்சு..

நான்:      அணு உலைக்கு அருகே உள்ள வீட்டுக்கு நான் காப்பீடு எடுக்க முடியுமா?

நண்பர்: ஆஹா... நீ கடைசியில் அங்க வரியா?

நான்:      முதல்ல இருந்தே அங்க தான் வரேன்...

நண்பர்: எடுக்கலாம்பா..

நான்:      ஒரு வேளை அணு உலை விபத்துக்கு உள்ளாகி என் வீடு கதிரியக்க வளையத்தில் சிக்கி இருந்தா என் வீட்டுக்கு.. காப்பீடு கிடைக்குமா?

நண்பர்: நீ காப்பீடு பண்ண வேணாம்... என்னை ஆளை விடு... 

நான்:     டேய், டேய் பதிலை சொல்லிடுடா...

நண்பர்: உன் வீடு கதிரியக்க பாதிப்புக்குள் சிக்கிடுச்சுன்னா உனக்கு இழப்பீடு கிடைக்காது... ஆனா பூகம்பத்தால் அணு உலை விபத்து நிகழ்ந்தால், இயற்கை பேரிடரால் உன் வீடு பாதிக்கப் பட்டதாக அதுக்கு நீ இழப்பீடு பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அந்த நேரத்தில் காப்பீட்டு நிறுவனங்கள் அந்த இடத்துக்கு சேதாரத்தை ஆராய எப்படி செல்வார்கள் என்று தெரியாது... ஆகையால் இந்த கேள்விக்கு வரும் ஆனா வராது என்று தான் பதில் சொல்ல முடியும்..

நான்:     ஒரு வேளை இயற்கை அழிவு இல்லாமல் மனித தவறால் விபத்து நேர்ந்தால்...

நண்பர்: போடாங்க... நீயும் உன் காப்பீடும்...

நான்:      அதை நான் சொல்லணும்...

தனி நபர் காப்பீட்டில் உள்ள அணு உலை விபத்து குறித்து அறிந்து கொள்ள

வீட்டு காப்பீடு குறித்து அறிந்து கொள்ள