politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

2.3.12

நாங்களும் கேப்போமில்ல?

கூடங்குளத்தின் போராட்டம் ஏற்படுத்தியுள்ள விவாதம் போல் எந்த போராட்டமும் இது வரை ஏற்படுத்தியதில்லை என்றே கூறலாம்...

எட்டு மணி நேரம் முதல் பத்து மணி நேர மின் தடையை சந்திப்பதால் வரும் எரிச்சல் சிலருக்கு கூடங்குளம் திறந்தே ஆக வேண்டும் என்று பேச வைக்கிறது... மத்திய அமைச்சர் நாராயணசாமி முழு உற்பத்தியான ஆயிரம் மெகா வாட்டை தமிழகமே வைத்துக் கொள்ளட்டும், ஆனால் கூடங்குளத்தை திறக்க தமிழக அரசு முன் வர வேண்டும் என்ற ரீதியில் பேசி இருக்கிறார்...

ஜைதாபூரில் அணு உலை திறக்கக் கூடாது என்று போராட்டக் குழு அமைத்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல்வாதிகள் கூடங்குளம் திறக்கப் பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்...

இந்தியா சுதந்திரம் அடைய வேண்டும் என்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடிய அனைவரும், அத்தனை காலம் போராட யாரிடம் பணம் வாங்கினார்கள் என்று சிந்தித்து பார்த்தால், காங்கிரஸ் தியாகிகள் கூடங்குள மக்கள் வெளிநாட்டினரிடம் கை நீட்டவில்லை என்று உணர்ந்து கொள்வார்கள்...

லஞ்சம் கொடுப்பது தவறு என்று கூறும் நம் முன்னாள் ஜனாதிபதி அந்த பகுதி மக்களுக்கு இருநூறு கோடி ரூபாய்க்கு திட்டங்களை முன் வைத்து தாஜா செய்கிறார்..

அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு சர்வதேச கழகத்தின் கண் கொத்தி பார்வையில் இருக்கும் பொழுதே இரானின் அணுமின்சார உற்பத்திக்கு ஆப்பு அடிக்கும் சர்வதேச வளர்ந்த நாடுகள், இந்தியாவை பிற்காலத்தில் எப்படி எல்லாம் ஆட்டி வைக்கப் போகிறது என்பதை சிந்தித்துப் பார்க்க யாரும் தயாராய் இல்லை...

சுய சந்தோஷத்திற்காக பொது மக்களின் வாழ்க்கையில் சிகரெட் புகையை ஊதித் தள்ளும் ஒருவன் கூட , தன் வீட்டருகில் அமைக்கப் பட்டுள்ள செங்கல் சூளைக்கு எதிராக போர்க்கொடி தூக்குகிறான்...செங்கல் சூளை என்பது அணு உலை விட ஆபத்தானதா என்ன?

பயத்தின் அரசியல் என்று சிலர் வாய் சவடால் காட்டி தங்களை வீரர்களாய் காட்டிக் கொள்கிறார்கள், தன்னால் வாழ முடியாது என்ற பயம் தான் ஒருவனை போராடவே வைக்கிறது என்பதை போராளிகளின் போர்வையில் இருக்கும் சிலரும் மறந்து விடுகிறார்கள்...

மீனவர்களை குறித்து சூனிய விகடன் பல கேள்விகள் கேட்டார்... அதற்கு ஒரே பதில் தான் என்னிடம் உள்ளது...

அனைவரும் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள், மீன்களின் கூட்டமும், விலங்குகளின் கூட்டமும் கருவறுக்கப் படாது...

மிருகங்களின் வாழ்வாதரத்துக்காக கவலைப் படுபவர்கள் மனிதனை குறித்து கவலைப் படுவதில்லை என்று எங்கோ படித்த கவிதை தான் நினைவுக்கு வருகிறது.

சர்வதேச கடல் எல்லையில் மீன் பிடித்தால் எந்த தொல்லையும் இல்லை என்று சூனிய விகடன் எந்த நேரத்தில் சொன்னாரோ தெரியவில்லை, அதுவே இத்தாலிக்கும் இந்தியாவுக்கும் பெரிய பிரச்சினையாகி உள்ளது..

கூடங்குள மக்களின் உணர்வில் அணு உலை எதிர்ப்பு என்பது படிந்து விட்டது. அது படிமமாக மாறாது...  எங்கு அணு உலை போராட்டம் நடந்தாலும், என்னைப் போல் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு ஆதரவு அளிக்கத் தவற மாட்டார்கள் என்று அந்த மக்களை சந்திக்காமலே என்னால் கூற முடியும்.

அணு உலை ஆதரவாளர்களுக்கு நான் கேட்க்கும் சில கேள்விகள்...

நீங்கள் ஆயிரம் கேள்விகள் கேட்டீர்கள், நாங்கள் அனைத்திற்கும் பதில் சொன்னோம்...

நாங்கள் சில கேள்விகள் கேட்கிறோம்...
பதில் சொல்லுங்கள்..

அணு உலைக்கு அருகில் இருக்கும் வீடுகளுக்கு ஏன் எந்த காப்பீட்டு நிறுவனமும் காப்பீடு செய்ய முன் வருவதில்லை?

அணு உலையில் வேலை செய்யும் நபர்களுக்கு ஏன் கதிர்வீச்சு பாதிப்பை விபத்து காப்பீடாய் ஏற்பதில்லை?

ஒரு அணு உலை கட்ட ஆகும் ஆண்டுகளின் உழைப்பையும்,  பல்லாயிரக் கணக்கான கோடி பணத்தையும் ஏன் சூரிய ஒளியில் தயாரிக்கும் மின்சாரத்தில் அரசு முதலீடு செய்வதில்லை?

அப்படி அது சாத்தியமில்லாத ஒன்று என்றால் எப்படி லாபம் நோக்கு மட்டுமே உடைய தனியார் நிறுவனங்கள் சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்க முன் வருகிறார்கள்? அவர்களிடம் இருந்து மின்சாரத்தை வாங்குவது யார்?

சூரிய ஒளி மின்சாரத்தை தயாரிக்க அரசு கொடுக்கும் மானியத்தில் அரசே இதை அமைக்காதது ஏன்?

வழக்கம் போல் தலையை சுற்றி மூக்கை தொடும் பதில்களை தான் தருவீர்கள் என்பது தெரிந்தே கேட்கிறோம்... பதில்கள் எங்களுக்கு தேவை இல்லை... புழுக்கத்தில் உட்கார்ந்து இருக்க விரும்பாத உங்கள் சுயநல புத்திக்கு உரைத்தால் போதுமானது..

அநீதிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன, அவற்றை எதிர்த்து போராட்டங்களும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன... அநீதிகள் வென்று விடுவதால் அதை எதிர்க்கும் நேர்மை தோற்று விடுவதாய் அர்த்தம் இல்லை... அநீதியை எதிர்த்து கேள்வி கேட்ட வீரம் எங்களுக்கு போதுமானது...

வேலை பளு அதிகம் உள்ளதாலும், எட்டு மணி நேர மின் தடையில் அமர்ந்து இருப்பதாலும்  அநேகமாய் இந்த மாத இறுதியில் தான் என்னால் வழக்கம் போல் வலையில் உலா வர முடியும் என்று எண்ணுகிறேன்.. அது வரை அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.