politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

31.12.11

2011 லிருந்து 2012...

கடைசி இரு வாரங்கள்...
நாடகத்தின் உச்ச கட்டம் அரங்கேறிய நாட்கள்...

கூடங்குளம் குறித்து பிரதமர் உறுதி.

கூடங்குளம் கண்டிப்பாக திறக்கப் படும் என்றும், ஏதாவது ஆபத்து என்றால் ரஷ்ய நிறுவனம் பொறுப்பேற்காது என்றும் பிரதமர் கூறியதும்..

முல்லைப் பெரியாறு விவகாரம்.

இரு மாநில மக்களின் ஒற்றுமையை குலைத்த சங்கதி, காங்கிரஸ் நிர்வாகிகளிடமே ஒற்றுமையை குலைத்த விவகாரம், பல்வேறு பிரச்சினைகளை மக்களின் மனதில் இருந்து நீக்கிய சமாச்சாரம்

லோக் பால் மசோதா.

ஊழலை ஒழிக்க சட்டம் கொண்டு வருவது என்பது, திருடனை கூப்பிட்டு காவலுக்கு உட்கார வைப்பது போன்றது என்று உணர்த்திய நிகழ்ச்சி... தனக்கு தேவையான சரத்து லோக் பால் மசோதாவில் உள்ளது என்று தெரிந்ததும், உண்ணாவிரதத்தை கைவிட்ட அண்ணா ஹஜாரே.. காங்கிரஸ் அரசின் கையாலாகா தனத்தை தோலுரித்து காட்டிய நள்ளிரவு நாடகங்கள்.

மன்னார்குடி குடும்பத்தினர் நீக்கம்.

நகமும் சதையுமாக இருந்த உடன்பிறவா சகோதரிகளின் பிரிவு, ஏன் என்று எழுந்து நிற்கும் கேள்வியுடன் மொத்த பிரச்சினைகளும் மறந்த நிலை.

எதிர்பார்ப்புடன் தொடங்கிய ஆண்டு, அலைக்கற்றை ஊழல் புயலில் சிக்கி, தமிழகத்தில் தானே புயலில் முடிந்திருக்கிறது...

அடுத்த ஆண்டிலும் எந்த வித மாறுதலும் இருக்க போவதில்லை என்று அறிவு சொன்னாலும், நம்பிக்கை தானே வாழ்க்கை என்று புத்தி சொல்கிறது...

ஆகவே ஆங்கில புத்தாண்டை இனிதே வரவேற்று முடிந்த வரை தோய்வில்லாமல் மீண்டும் எழுத முயற்ச்சிக்கிறேன் என்று உறுதி சொல்கிறேன்...

14.12.11

இடுக்கியும் இடிந்தகரையும்

கூடங்குளம் போராட்டமும், முல்லைப் பெரியார் அணை போராட்டமும் ஏறக்குறைய ஒரே அடிநாதம் கொண்டது தான்...இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை, பூகம்பம் வந்தால் என்னாகும் என்ற பயம் தான்...


இடிந்தகரையும் சரி, இடுக்கியும் சரி  பூகம்ப சோன் மூன்றில் தான் வருகின்றன...

இரண்டு இடத்திலுமே பூகம்பம் ஆறு ரிக்டர் அளவுக்கு மேல் வந்தால், மனித உயிர் இழப்பு என்பது அபிரிமிதமாக இருக்கும்...

[இடுக்கியில் பாதிப்பு வராது என்று கூறுபவர்களுக்கு - ஆறு ரிக்டருக்கு மேல் பூகம்பம் வந்தால், முல்லை பெரியாறு அணை மட்டும் அல்ல... இடுக்கி அணையும் உடைய வாய்ப்புள்ளது என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன். விவசாய சங்க தலைவர் ஒருவர் கேட்டதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன், கேரளா அரசு கட்டப் போகும் அணை மட்டும் பூகம்பம் வந்தால் இடியாதா?]

அப்துல் கலாம் அவர்கள் கூடங்குளம் பகுதியில் பூகம்பம் வரவே வராது என்று ஆரூடம் சொன்னார். மேலும் ராஜ ராஜன் கட்டிய அணையே இன்னும் வலுவாக இருக்கிறதே என்று மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட்டார்...

விஷயம் என்ன என்றால்,

நேற்று அப்துல் கலாம் அவர்கள், முல்லைப் பெரியாறு அணையை பலப் படுத்த ஆலோசனை கூறி உள்ளார்... இது சரியான ஆலோசனையாக இருந்தாலும், கூடங்குளத்திற்கு ஒரு பார்வை என்றும்... முல்லைப் பெரியாறுக்கு ஒரு பார்வை என்றும் இருப்பது நியாயமா?

இடிந்த கரையில் பூகம்பம் ஆறு ரிக்டருக்கு மேல் வராது என்றால் இடுக்கியிலும் ஆறு ரிக்டருக்கு மேல் வரப் போவதில்லை..

எப்பொழுதோ கட்டிய கல்லணை பலமாக இருக்கிறது என்றால், அதற்க்கு பிறகு கட்டிய முல்லை பெரியாறு அணை கூட பலமாக தானே இருக்கும்...

இவ்வளவு பேசிய அப்துல் கலாம் அவர்கள் நதிநீரை இணைப்பது குறித்தும், ஆறுகளை தேசிய மயமாக்குவது குறித்தும் பேசி இருக்கலாம்.. [இன்று மாலை வெளியான செய்திக் குறிப்பில் இந்த ஆலோசனையையும் குறிப்பிட்டுள்ளார், அப்துல் கலாம் அவர்கள்]

இடுக்கியில் பாதிப்பு வந்தால் இப்பொழுது வாழ்பவர்களுடன் உயிரிழப்பு முடிந்து விடும்.. கூடங்குள பகுதியிலோ தப்பி பிழைத்தவர்களும் இனி பிறக்கப் போகிறவர்களும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்பதை மீண்டும் நினைவுப் படுத்துகிறேன்.

மக்களின் பயத்தை போக்க அப்துல் கலாம் கூறிய ஆலோசனை பரிசீலிக்கப் பட வேண்டியது தான்.. அதே நேரத்தில் கூடங்குள மக்கள் போராட்டத்தையும் கலாமை ஆதரிப்பவர்கள் பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள் என்று கூறிக் கொள்கிறேன்.

உச்ச நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவால் சிறிது நாட்கள் நாம் மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்தலாம் என்பது தான்  நிதர்சனம்...

http://tamil.oneindia.in/news/2011/12/13/tamilnadu-army-can-maintian-protect-dams-kalam-writes-pm-aid0128.html

http://www.mapsofindia.com/maps/india/seismiczone.htm

12.12.11

அடுத்து கல்பாக்கம்

கல்பாக்கம் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து விசாரிக்க காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் சென்றதாகவும், கதிர்வீச்சு குறித்த கேள்விக்கு அணு ஆற்றல் கட்டுப்பாட்டு குழு நிர்ணயித்த அளவை விட அதிகமாக கதிர்வீச்சு வெளியாகவில்லை என்று அதிகாரிகள் அவரிடம் கூறி உள்ளனர் ...
இதற்க்கு நேரடியாக ஆமாம் கதிர்வீச்சு வெளியாகிறது என்று உண்மையை ஒத்துக் கொண்டிருக்கலாம்..
http://ibnlive.in.com/generalnewsfeed/news/mp-visits-kalpakkam-nuclear-plant/924258.html

இன்று,
வலை பதிவுகளில் சூறாவளி என்ற பெயரில் இயங்கும் அமைப்பு, கூடங்குளம் போராட்ட குழுவின் தலைவரான திரு.உதய குமார் அவர்களின் பேட்டியை வெளியிட்டு உள்ளனர். அந்த பேட்டியில் கல்பாக்கம் மீனவர்கள், கல்பாக்கம் பகுதியில் மீன்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாகவும், வழக்கமாக கிடைக்கும் மீனும் நோய் வாய்ப் பட்டே இருப்பதாகவும் கூறுவதாக தகவல் அளித்துள்ளார்

அந்த பேட்டியின் ஒலி வடிவத்தை, எழுத்து வடிவில் மாற்றி நம் பார்வைக்கு வைத்து உள்ளனர்..

http://suraavali.blogspot.com/2011/12/blog-post_11.html

எனக்கு ஒலி வடிவத்தை பதிவுகளில் இணைக்கும் தொழில் நுட்பம் தெரியாததால், அந்த ஒலியை, ஒலி ஒளி வடிவாக மாற்றி யூட்யூப் மூலம் பகிர்ந்து கொண்டுள்ளேன்...நேற்று என் முந்தய பதிவில்,  சூனிய விகடன்என்பவர்  நம் நண்பர் கூடல் பாலா குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். நான் கடைசியாக கூடல் பாலாவிடம் பேசிய பொழுது, உண்ணாவிரதம் இருந்த காரணத்தால் அவர் உடல் நிலை மோசமாகி போனதாகவும், மருத்துவர்கள் பேசுவதை குறைத்துக் கொள்ள அறிவுறுத்தி இருப்பதாகவும் கூறி இருந்தார். ஆகையால் அவரிடம் நான் பேச முயற்ச்சிக்கவில்லை. ஒரு வாரம் முன்பு வைரை  சதீஷ் இடம் கேட்ட பொழுது, அவரும் தகவல் கிடைத்தால் தெரிவிக்கிறேன் என்று கூறினார்... மக்களுக்காக போராடிய மாவீரன் நம் தோழன் கூடல் பாலா. வலை பதிவுகளின் வரலாற்றில் அவன் பெயர் நீங்கா இடம் பிடித்திருக்கும்.

11.12.11

சத்திய_சோதனை @ இந்தியா.காம்

சத்திய சோதனை என்ற தலைப்பில்  இந்த வருட ஏப்ரல் மாத இறுதியில் இணையத்தில் உலவும் கருத்துக்களை முடக்குவதற்கு The Information Act 2008 மாற்றம் கொண்டு வந்ததை குறித்து கொஞ்சம் தவறாகவே குறிப்பிட்டு இருந்தேன்...

இன்று கபில் சிபல் பேசிய பிறகு, இணைய உலகமே விழித்து கொண்டு உள்ளது... சுமார் எட்டு மாதங்கள் கழிந்த பிறகு தான் அந்த துறையின் அமைச்சருக்கே இணைய உலகில் உலவும் கருத்துக்களை முடக்குவதில் உள்ள சிரமம் எரிச்சலை கிளப்பி உள்ளது..

தோழர். புலவர். சா. ராமானுசம் பதிவர்களுக்கு சங்கம் அமைக்க முன்முயற்சி எடுப்போம் என்று அறைகூவல் விடுத்துள்ளார்.

சில தோழர்கள் இந்த சட்டம் பதிவர்களுக்கு பொருந்தாது என்ற நினைப்பில் உள்ளதும் அந்த பதிவில் வந்த பின்னூட்டத்தில் தெரிய வந்துள்ளது. இந்த சட்டத்தில் மார்ச் மாத நடுப் பகுதியில் பதிவர்கள் குறித்து சரத்துக்கள் சேர்க்கப் பட்டு அவர்களின் பேச்சுரிமையை அடக்கவும் வழி வகை செய்யப் பட்டுள்ளது...

பதிவர்கள் எப்படி இந்த சட்டத்தில் நுழைக்கப் பட்டுள்ளனர் என்பதற்கான செய்திக் குறிப்பு...
http://chmag.in/article/may2011/cybercrimeopedia-new-rules-under-information-technology-act

http://www.drishtikone.com/blog/draconian-intent-government-india-new-it-act-rules-which-threaten-gag-bloggers

இந்த வருடத்தின் முதல் ஆறு மாதத்தில் 358 பதிவுகளை நீக்க வேண்டும் என்று இந்திய அரசு, பன்னாட்டு இணைய நிறுவனங்களிடம் வைத்த கோரிக்கையின் பட்டியல் இந்து நாளிதழின் செய்திக் குறிப்பில் உள்ளது

http://www.thehindu.com/opinion/editorial/article2698888.ece

இதன் மூலம் பாதிக்கப் பட்டவர் தான் நம் பதிவர் தோழர். ரெவெரி அவர்களும், அது குறித்த அவரின் பதிவு http://reverienreality.blogspot.com/2011/11/spam.html

9.12.11

தண்ணீர் - வெள்ளம்

முல்லை பெரியாறு அணை...

தமிழகத்திற்கு நீர் வரத்து இல்லை என்றால் தமிழக விவசாயிகள் பாதிக்கப் படுவார்கள்..

அணை உடைந்தால் கேரளா மக்கள் பாதிக்கப் படுவார்கள்.

கேரளா அரசு அணை கட்டி தருகிறேன் என்று சொல்வதை காது கொடுத்து கேட்டால் தமிழகத்திற்கு நீரே கிடைக்காது..

அதே சமயம் தமிழக அரசும் இந்த அணையின் உறுதியின் மீது நம்பிக்கை வைத்து இது உடையவே உடையாது என்று அடித்து சொல்வது ஏற்புடையதும் அல்ல...

தமிழக அரசே தமிழகத்திற்கு நீர் கிடைக்கும் வகையில் புதிய அணை கட்ட வேண்டும்.. ஆனால் அது மாதிரி முனகல் கூட எழவில்லை என்பது வருத்தத்துக்கு உரியது..

நதி நீரை தேசிய மயமாக்குவது மட்டுமே பிரச்சினைக்கு முடிவு என்று கூறுவது மத்திய அரசின் ஓட்டு அரசியலுக்கு சாதகமாகவே முடியும்.

பிரவோம் என்ற எர்ணாகுளத்தில் உள்ள தொகுதிக்கு இடைத் தேர்தல் வர இருப்பதாலும், இரு கட்சிகளின் தலைவர்கள் மீதும் ஊழல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளதாலும் மக்கள் கவனத்தை திசை திருப்ப கேரள அரசியல்வாதிகள் முயற்சி செய்கின்றனர்.

பல்வேறு கட்ட விலைவாசி உயர்வும், தமிழகத்தில் நிலவும் அசாதரணமான மக்கள் விரோத ஆட்சி குறித்த பதிவுகள் மக்கள் மனதில் இல்லாமல் இருக்க தமிழக அரசியல்வாதிகள் இந்த பிரச்சினையை கையாளத் தெரியாமல் கையாள்கின்றனர்.

இந்த சூழ்நிலையை பயன் படுத்தி சந்தர்ப்ப வாதிகள் தங்களுக்கு தேவையானதை செய்து கொள்ள முடியும்..
தமிழக பெண்கள் மீது வன்முறையில் ஈடுபடலாம், தமிழர்களின் பொருட்களை சூறையாடலாம், மலையாள கடையை அடித்து நொறுக்கி கொள்ளை அடிக்கலாம், அல்லது மலையாள பெண்கள் மீதும் வன்முறையில் ஈடுபடலாம்..

தமிழனை அடித்து விட்டான் மலையாளி என்றும், மலையாளியை அடித்து விட்டான் தமிழன் என்றும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு ஆளும் வர்க்கத்தின் இனவெறி அரசியலுக்கு பலி ஆகாமல் சற்று நிதானமாக யோசித்து நாம் அனைவரும் ஒற்றுமையாய்  நலமாக வாழ சரியான வழியை நிபுணர்கள் முன்வைத்தால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்...

ஒன்றை மற்றும் நினைவில் கொள்ள வேண்டும்... பணக்காரர்களுக்கு இரு மாநில காவல் துறையும் பாதுகாப்பு கொடுக்கும்.. இந்த பிரச்சினையில் பாதிக்கப் படப் போவது பெரும் பணக்காரர்கள் அல்ல, கஷ்டப் படும் உழைக்கும் வர்க்கமே.

http://www.asianage.com/india/opposition-will-raise-funds-build-new-dam-achuthanandan-272

இது சம்பந்தமாக கேரளா மக்கள் தயாரித்த வீடியோ வும், அதற்க்கு பதில் கொடுத்து தமிழக முன்னாள் பொறியாளர்கள் தயாரித்த வீடியோ வும் இந்த பக்கத்தின் கடைசியில் உள்ளது

8.12.11

அந்நிய மூலதனம் - நிலைமையை சீராக்குமா?

அந்நிய மூலதனம் சில்லறை வர்த்தகத்தில் நுழையும் பொழுது விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்றும், மக்களுக்கு விலை குறைவாகவும் தரமாகவும் பொருட்கள் கிடைக்கும் என்றும் கூறப் படுகிறது...

அந்நிய மூலதனம் உள்ளே வருவதால் யார் யாருக்கு என்ன என்ன பிரச்சினை வரலாம் என்று பார்ப்போம்..

முதலில் ஒரு பொருளை விற்பனை செய்ய தேவைப் படும் விற்பனை பிரதிநிதி வேலை இழப்பான்.. ஒரு பொருளை மொத்தமாக ஒரே இடத்தில் வாங்கும் பொழுது, அந்த பொருளை விளம்பரப் படுத்தவோ அல்லது ஆர்டர் எடுக்கவோ தேவை இல்லை என்பதால் பல விற்பனை பிரதிநிதிகள் வேலை காலி..

இரண்டாவது பல சிறிய சில்லறை வியாபாரிகள் கடையை மூட வேண்டியது தான்.. அவர்களிடம் சர்வீஸ் சரியில்லை என்று கூறுவீர்களேயானால், நீங்கள் தொடர்ந்து அதே வியாபாரியிடம் வாங்கும் பட்சத்தில் அவர் உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைக்க தவறுவதில்லை... என்னை பொறுத்தவரை இதை பெரிய கடைகளில் எதிர் பார்க்க முடியாது... நிச்சயம் சில்லறை வணிகர்கள் அழிந்து விட மாட்டார்கள், அவர்களின் எண்ணிக்கை குறைந்து விடும். நேர்மையான கடைகளும், மக்களிடம் நம்பிக்கை பெற்ற நட்பான கடைகளும் அழியாது..

மூன்றாவது பாதிக்கு மேல் கொள்முதலை வெளிநாடுகளில் வாங்கிக் கொள்ள அனுமதிக்கப் பட்டுள்ளதால் உலகம் முழுவதிலும் கால் பதித்து வைத்திருக்கும் அந்நிய நிறுவனங்கள் பெரும்பாலும் விலை குறைவாக உள்ள பகுதிகளில் கொள்முதலை ஆரம்பிப்பார்கள்.. அப்பொழுது உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப் படுவார்கள்... நம் நாட்டில் நூல் விலை உயரும் பொழுது வெளிநாட்டில் இப்பொழுது இருக்கும்  முதலாளிகள் இறக்குமதி செய்யவில்லையா என்ற கேள்வி வருகிறது... அந்த நேரத்தில் வெளிநாட்டில் இருந்து நூல் இறக்குமதி செய்வதை தடை செய்ய கோரி போராட்டம் நடந்து நிலைமை சீரானது. ஆனால் அந்நிய முதலாளிகளுக்கு கதவை திறந்து விட்ட பிறகு தடை போட முடியாது என்பதே நிதர்சனம்..

நான்காவது பெரும்பாலான இந்திய பணம், அந்நிய நிறுவன நாடுகளின் பணமாக மாறி விடும் பட்சத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு குறைய ஆரம்பிக்கும். இது சில அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்திற்கு வித்திடும் என்பது கண்கூடு...
உதாரணம் தற்பொழுது இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதால் பெட்ரோல்  விலை உயர்வது கண்ணால் கண்டு விட்டோம்.

செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி, விலை ஏற்றம் செய்ய எதுவாக மொத்த கொள்முதல் நடக்கும். அப்பொழுது வெளி மார்கெட்டில் கிடைக்கும் விலையை விட இந்த அந்நிய நிறுவனங்களின் பொருள் குறைந்த விலையில் விற்றாலும் அதிக லாபம் பெற ஏதுவாகும்...

இன்னும் முன் பெற வர்த்தகம் மூலமாகவும் விலையை நிர்ணயிப்பதில் வாய்ப்புள்ளதாக என் கணிப்பு. ஏற்கனவே நம் நாட்டு முன்பேர வர்த்தகத்தில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டு வருவது நாம் அறிந்ததே.. தற்பொழுது திடீரென்று சர்க்கரை உற்பத்தி நம் நாட்டில் உபரி உற்பத்தி ஆனதால், அதை ஏற்றுமதி செய்வது என்று இந்திய அரசு முடிவெடுத்ததால் சர்வதேச முன்பேர வர்த்தகத்தில் சர்க்கரை விலை குறைந்தது என்றும் இதனால் வெளிநாட்டு வர்த்தகர்கள் நஷ்டத்தை சந்தித்தார்கள் என்றும் செய்திக் குறிப்பு சொல்கிறது...

கீழே உள்ள படத்தை சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்..ஆக இனி அப்படி ஏதாவது அதிக உற்பத்தி நடக்கும் பட்சத்தில் அந்நிய நிறுவனங்கள் உள்நாட்டில் அதை வாங்கி முடக்கி வைத்து முன்பேர வர்த்தகத்தில் விலை குறையாமல் பார்த்துக் கொள்வார்கள்..

சர்க்கரை குறித்து நமக்கு என்ன கவலை, நம் நாட்டிலே தான் ரேஷன் கடைகள் அருமையாக இருக்கிறதே என்பவரா நீங்கள்..
உங்களுக்காகவே அரசு உணவு பாதுகாப்பு மசோதா என்று ஒன்றை உருவாக்கி ரேஷன் கடைகளை அழிக்க கிளம்ப போகிறது...

தற்பொழுது உள்ள சில்லறை வணிகம் அழுகிய நிலையில் தான் உள்ளது, ஆனால் அதை சீராக்க முயற்சி செய்யாமல்... எவனோ ஒரு வெளிநாட்டுக் காரன் வந்து சரி செய்வான் என்று நம்புவது எந்த விதத்தில் சேர்ப்பது என்று தான் தெரியவில்லை

7.12.11

கமாடிடி சந்தை...

நேரடி வர்த்தகம் [spot trade] மற்றும் முன்பேர வர்த்தகம்.. [futures]

நாம் அன்றாடம் வாங்கும் பொருட்களில் எப்படி எல்லாம் விலை நிர்ணயம் செய்கிறார்கள் என்று ஒரு பார்வை. கட்டுரையாக கொடுத்தால் படிக்க சிரமமாக இருக்கும் என்று கேள்வி பதில் மூலம் இங்கு விளக்குகிறேன்...

ஆணிவேர்: நேரடி வர்த்தகம் என்றால் என்ன?

நண்பர்: இணையத்தில் இன்று விற்கும் பொருளை இன்று என்ன விலை என்று பார்த்து இணையத்தில் ஆர்டர் செய்து வீட்டுக்கே டெலிவரி செய்யும் முறை தான் நேரடி வர்த்தகம்.

ஆணிவேர்: முன்பேர வர்த்தகம் என்றால் என்ன?

நண்பர்: ஒரு பொருளை வாங்கிக் கொள்ள, குறிப்பிட்டுள்ள ஊகத்தின் அடிப்படையிலான விலையில் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளப் போடப் படும் ஒப்பந்தமே முன்பேர வர்த்தகம் ஆகும்.

அதாவது ஒரு பேரல் கச்சா எண்ணெய் 1/1/2012 தேதியில் $.5500/= விலைக்கு வாங்கிக் கொள்கிறேன் என்று யூகத்தின் அடிப்படையில் ஒப்பந்தம் செய்துக் கொள்வது..

ஆணிவேர்: அந்த நாளில் குறிப்பிடப் பட்டுள்ள விலையை விட அதிகம் இருந்தால்?

நண்பர்: அது லாபம்.

ஆணிவேர்: ஒரு வேளை அது குறிப்பிடப் பட்டுள்ள விலையை விட குறைவாக இருந்தால்?

நண்பர்: அது நஷ்டம் என்று எடுத்துக் கொண்டாலும்.. அந்த ஒப்பந்தம் நஷ்டம் அடையாமல் பார்த்துக் கொள்ள ஹெட்ஜிங் என்ற ஒரு வகையை நாங்கள் கை ஆள்வோம்...

ஆணிவேர்: அது என்ன ஹெட்ஜிங்?

நண்பர்: அதாவது இன்னொரு ஒப்பந்தத்தில் வாங்கி, எந்த அளவுக்கு நஷ்டம் அடைந்ததோ அந்தளவு விலை ஏறிய உடன் விற்று விடுவோம்..

ஆணிவேர்: ஒரு நாளைக்கு தடாலடியாக விலை ஏறுமா?

நண்பர்: பங்கு சந்தை போல் இங்கு தடாலடியாக விலை ஏறாது.. ஒரு நாளைக்கு சராசரியாக மூன்று சதவிகிதம் விலை ஏற அனுமதிக்கப் படுகிறது.. அந்த குறிப்பிட்ட அளவு வந்தவுடன் விலை ஏற்றம் தடை செய்யப் படும்.

ஆணிவேர்: அப்படி என்றால் பத்து நாளைக்கு முப்பது சதவிகிதம் விலை ஏற முடியும். அப்படி தானே?

நண்பர்: ஏறக் குறைய அப்படி தான்.. ஆனால் முழுமையாக அப்படி நடக்க வாய்ப்பில்லை..

ஆணிவேர்: அப்படி என்றால் ஊக வணிகத்தால் விலை ஏறுகிறது என்று எதை வைத்து போராடுகிறார்கள்?

நண்பர்: ஊக வணிகத்தில் விலை நம் நாட்டு நிலவரம் வைத்து விலை நிர்ணயிக்கப் படுவதில்லை.. சர்வதேச சந்தையின் நிலைமையை வைத்தே உள்நாட்டு பொருட்களின் விலை நிர்ணயிக்கப் படுகிறது.

ஆணிவேர்: தற்காலிக தட்டுப் பாடை உருவாக்கி இங்கு பொருட்களின் விலையை ஏற்ற முடியுமா?

நண்பர்: நான் ஏற்கனவே கூறியது போல் தடாலடியாக உயர்த்த வாய்ப்பில்லை... கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்த முடியும். ஆனால் கட்டுப்பாடுகளும் அதிகம். அரிசி வகையாறாக்களில் பாசுமதி அரிசி மட்டுமே இந்த சந்தையில் கிடைக்கும்.. சாதாரண அரிசி கிடைக்காது... அது போல் கட்டுப்பாடுகள் அதிகம்...

ஆணிவேர்: இந்த வணிக முறையில் யார் யார் ஈடுபடலாம்?

நண்பர்: இந்திய நிரந்தர வருமான வரி கணக்கை வைத்து உள்ள யாரும் ஈடுபடலாம். நீங்கள் அடுத்து என்ன கேட்பீர்கள் என்று தெரியும். வெளிநாட்டினரும் ஈடுபடலாம், பாஸ்போர்ட் வைத்து கொண்டு.

ஆக
முட்டை என்பது சைவம் என்றாகிவிட்டது,
பீர் என்பது குளிர்பானம் என்றாகிவிட்டது..
பந்தயம் கட்டி விளையாடும் ரம்மி சூதாட்டம் இல்லை என்று உயர் நீதிமன்றம் கூறி விட்டது..
அதே போல் பங்கு சந்தையும் சூதாட்டம் அல்ல என்று காலம் காலமாய் சொல்லி வருவதை, இல்லை என்றே ஆளும் வர்க்கம் சொல்லி வருகிறது.


இதை முழுவதும் புரிந்து கொள்ள நான் இதே துறையில் ஒரு வருடம் இருந்தால் மட்டுமே முடியும் என்று என் நண்பன் கூறி விட்டான்.. ஆகையால் எனக்கு புரிந்த அளவுக்கு நான் இங்கு விளக்கி இருக்கிறேன்..

4.12.11

எப்பூடி...

பெட்ரோல் விலை குறைவதும், விலை ஏறுவதும் சர்வதேச எண்ணெய் சந்தையின் விலையை பொறுத்து என்று நம்பி கொண்டிருப்பவரா நீங்கள்...

நம் நாட்டின் பெட்ரோல் விலை உயர்வை தீர்மானிப்பது சிங்கப்பூர் நாட்டின் பெட்ரோல் விலை மட்டுமே என்ற ரகசியத்தை இன்று நாளிதழின் கட்டுரை அம்பலப் படுத்தி உள்ளது..

இத்தனைக்கும் நாம் சிங்கப்பூர் நாட்டில் இருந்து ஒரு சொட்டு பெட்ரோல் கூட வாங்கவில்லை என்று புலம்புகிறார் கட்டுரையாளர்..

மேலும் படிக்க...

http://www.thehindu.com/news/national/article2684791.ece

மேலும் பெட்ரோல் விலை குறித்த தகவல்களுக்கு

http://suryajeeva.blogspot.com/2011/09/blog-post_17.html


கமாடிடி மற்றும் முன் பேர வர்த்தகம் குறித்து பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன... இன்னும் ஒரு முழு வடிவம் பெறாததால்.. நாளை அல்லது அதற்க்கு மறு நாள் வெளி இடுவேன்...

2.12.11

சந்து பொந்துகளில் புகுந்து..

அணுசக்தி கட்டுப்பாடு இழப்பீடு மசோதா...
Nuclear Liability bill

இந்தோனேசியாவில் நடந்த மாநாட்டில், அமெரிக்க அரசின் பயத்திற்கு இந்திய அரசு எதுவும் செய்ய முடியாது என்றும்... அந்த பயத்தை நீக்க இந்திய அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே மசோதாவை அமுல் படுத்த முடியும் என்றும் நமது பிரதமர் சூளுரைத்ததை பலர் கை கொட்டி ஆரவாரமாக கொண்டாடினர்...

நேற்று இந்து நாளிதழில் வெளியான கட்டுரைகளில் ஒன்று இந்த மசோதாவானது எப்படி இந்திய அரசின் சட்டங்களில் உள்ள ஓட்டைகளை பயன் படுத்தி அமெரிக்க பன்னாட்டு முதலாளிகளுக்கு சாதகமாக உள்ளது என்று புட்டு புட்டு வைக்கிறது...

24 பிரிவின் கீழ் என்ன என்ன வரை அறுக்கப் பட்டு இருக்கிறது என்றால்

முதலில்

இழப்பீடு தொகை என்பது ஒப்பந்தத்தில் என்ன கூறியிருக்கிறதோ அல்லது எவ்வளவு இழப்பீடோ; இவற்றில் எது குறைவானதோ அதை அந்த நிறுவனம் கொடுத்தால் போதுமானது என்று அறிவுறுத்துகிறது...

உதாரணத்திற்கு
பாதிக்கப் பட்டவர்களுக்கு கணக்கிடப்பட்ட இழப்பீடு என்பது ஐந்து லட்சம் என்றால்,
ஒப்பந்தத்தில் ஒரு லட்சம் என்று இருக்கும் பட்சத்தில் சம்பந்தப் பட்ட நிறுவனம் இதில் குறைந்த தொகையை செலுத்தினால் போதுமானது..

இரண்டாவது..

அணு சக்தி கழகமானது ஒரு அணு உலைக்கான வாரண்டி நாட்களை ஐந்து வருடமாக வரை அறை செய்து வைத்துள்ளது... ஒரு வேளை விபத்தானது ஆறாவது வருடத்தில் நடந்தால் சம்பந்தப் பட்ட நிறுவனம் எந்த இழப்பீடும் தர வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது..

மூன்றாவது..

இந்த சட்டத்தில் எங்கும் சம்பந்தப் பட்டவர்களை நிர்ப்பந்தம் செய்ய எந்த விதியும் இல்லை என்றும் கூறி உள்ளார்.

கட்டுரையாளர் இவை அனைத்தையும் கூறி விட்டு, இந்த விதி 24 என்பதை நீக்க மக்கள் நலன் மீது அக்கறை உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் போராட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்..

http://www.thehindu.com/opinion/lead/article2675389.ece


ஆபத்தே இல்லைன்னு சொல்லி கிட்டு இருக்கிறோம், அப்புறம் ஏன்யா சட்டத்தில் இருக்கும் ஓட்டை பற்றி எல்லாம் கவலை பட்டு கொண்டு இருக்க வேண்டும் என்று சொல்பவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன்...