politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

20.9.13

கூடங்குளம் - அரசியல் பார்வை... 5

தொலைநோக்கு பார்வை இல்லாத அரசுகளின் காலடியில் இருந்து கொண்டு நம்மால் அணு மின் நிலையங்கள் இல்லாத ஒரு உலகத்தை நினைத்து பார்க்க முடியாது...

இது வரை ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருந்த கட்சிகளின் அரசியலை பார்த்து விட்டோம்... 

இவர்களுடன் சவாரி செய்து வந்த பல்வேறு சிறுகட்சிகளிடமும் அதே பார்வையை தான் நம்மால் உணர முடிகிறது... 

மொத்தத்தில் இவர்கள் பிரித்தாளும் கொள்கையை பயன்படுத்துவதில் வல்லவர்களாய் உள்ளார்கள்....

நாலு பேர் நல்லா இருக்கணும்னா எதுவும் தப்பில்லை என்று உரைக்கும் நாயகனின் வசனத்தை இவர்கள் வெளிப்படையாய் சொல்லாமல் அனைவர் மனதிலும் ஏற்றி விட முடிகிறது....

சரி 

அரசியல்வாதிகளின் கண்களுக்கு ஓட்டு என்பது மட்டும் தான் கண்ணுக்கு தெரியும்... ஆகையால் அவர்களின் அரசியலை புரிந்து கொள்ள முடிகிறது... 

ஆனால் சில மெத்த படித்தவர்கள் கூடங்குளத்தை ஆதரிப்பது எதற்காக?

இந்த கேள்விக்கு விடை கிடைப்பது எளிதல்ல 

அறியாமை என்று கூற முடியாது...
தொலைநோக்கு பார்வை இல்லாதது என்றும் கூற முடியாது...

அது எது என்று ஆதரிக்கும் அவர்களுக்கு தான் தெரியும்...

மிகவும் பாதுகாப்பானது என்று ஏற்றுக் கொள்ளும் இவர்களால் ... ஒரு வேளை விபத்து ஏற்பட்டால் அணு உலை நிறுவனம் பொறுப்பல்ல என்று நமது பிரதமர் கிளம்பினால்.. ஒருவர் விடாமல் அது தவறு என்று பேசுவது தான் ஏனென்று புரியவில்லை?

அதான் விபத்தே ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறுகிறீர்களே பிறகு  ஏன் விபத்து காப்பீடு குறித்து யோசிக்க வேண்டும்...

18.9.13

கூடங்குளம் - அரசியல் பார்வை... 4

பெரும்பான்மை பலம் உள்ள தேசிய கட்சிகளின் பார்வையை பார்த்து விட்டோம்...

இனி தமிழக கட்சிகள்...

தமிழகத்தில் இருக்கும் இரு பெரும் கட்சிகளுமே ஒன்றொக்கொன்று முரண்பட்ட கருத்தை தான் முன்வைக்கும்...

ஒன்று கிழக்கு என்றால் மற்றொன்று மேற்கு... 

ஒன்று பச்சை என்று சொன்னால் மற்றொன்று மஞ்சள் என்று சொல்லும்...

அப்படி பட்ட கட்சிகளிடம் கூடங்குளம் பட்ட பாடு, 

இருவருமே ஆதரிக்கும் ஒரு விஷயம்...

ஆகையால் எதிர்க்கிறார்களா? ஆதரிக்கிறார்களா? என்று மக்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை... 

இவர்கள் இந்த திட்டத்தை எதிர்க்கவே இல்லை, மாறாக மக்களின் பயத்தை போக்குங்கள் பிறகு பார்க்கலாம் என்று வாதம் செய்து வந்தார்கள்.. 

காரணம் பெரிதாக ஒன்றுமில்லை...

இருளில் இருக்கும் தமிழகத்தின் வெளிச்சத்துக்கு நெடுங்கால பார்வை என்று யோசிக்க முடியாத வறட்சி... இப்போதைக்கு பிரச்சினை தீர்ந்தால் போதும் கை கழுவிக் கொள்ளும் எண்ணம்...

இவர்கள் கொடுக்கும் இலவச கருவி அனைத்தையும் இயக்கினால் எவ்வளவு மின்சாரம் தேவை என்று கணக்கிட்டு பார்த்திருந்தால் தமிழகம் கூடங்குளத்தை நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலையே வந்திருக்காது...

15.9.13

கூடங்குளம் - அரசியல் பார்வை... 3

வலது அரசியலின் நோக்கத்தை அசை போட்டுக் கொண்டிருக்கும் பொழுதே அப்படியே ஒரு எட்டு இடது அரசியலின் நோக்கத்தை பார்த்து விடுவோம்...

இடது அரசியல் என்பது பெரும்பாலான தொழிலாளர்களின் பலத்தில் இயங்குவது...

இவ்வுலகில் அதிகமான அளவில் இருப்பது தொழிலாளர்கள் என்பதாலும், இவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும் பல்வேறு காரணங்களால் பிரிந்து பிளவுபட்டு இருப்பதால் இடது அரசியல் ஆட்சிக்கு வருவதற்கு ஒரு  பரந்த மனப்பான்மை உள்ள தலைவனால் மட்டுமே முடியும்...

ஆனால் பரந்த மனம் உள்ள தலைவர்கள் பல்வேறு காரணங்களால் முடிவெடுக்கும் நிலையில் இல்லாததால் குறுகிய மனப்பான்மை இங்கு ஓங்கி வளர்கிறது...

எவ்வளவுக்கு எவ்வளவு தொழிலாளர்களை சங்கத்தில் சேர்ப்பதின் மூலம் கட்சியின் பலத்தை உயர்த்திக் கொள்ள முடியும் என்ற குறுகிய மனம் உலக மக்களின் நன்மைக்கு சாவு மணி அடிக்கவே செய்கிறது...

கொக்கா கோலா நிறுவனம் அமைவதை எதிர்க்கும் அதே கட்சி வேறொரு இடத்தில் நடைபெறும் கொக்கா கோலா நிறுவனத்தில் தங்கள் தொழிற்சங்கத்தை வைத்திருக்கவே செய்கிறார்கள்..

ஒரு வேளை இந்த நிறுவனத்தை இழுத்து மூட வேண்டிய நிர்ப்பந்தம் வந்தால் தொழிலாளர்களை காப்பாற்றுவார்களா அல்லது இழுத்து மூட போராடுவார்களா என்ற கேள்விக்குறி பல நாட்களாகவே ஓடிக் கொண்டிருக்கிறது... கண்டிப்பாக அவர்களிடம் கேட்டால் இதற்கும் ஒரு பதில் இருக்கும்.. 


தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலை மாசுகட்டுப்பாட்டு வாரியத்தால் இழுத்து மூடப் பட்ட பொழுது அதன் தொழிற்சங்கம் அதனை எவ்வாறு எதிர்த்தது என்று அனைவரும் அறிந்ததே...

ஆதலால் தொழிலாலர்களின் ஒருங்கிணைப்புக்காக இவர்களுக்கு தொழிற்சாலைகள் தேவைப் படுகிறது...

அப்படிப்பட்ட தொழிற்சாலையாகவே கூடங்குளம் அணுமின் நிலையங்களையும் இடது அரசியல் பார்க்கிறது...

12.9.13

கூடங்குளம்-ஒரு அரசியல் பார்வை... கொசுறு

லாபியிங் என்று எந்த நேரத்தில் நேற்று என் கட்டுரையை முடித்தேனோ.. இன்று காலை செய்தி தாளை பிரித்தால் தலை சுற்றுகிறது... 

குளிர்பதன பெட்டியில் நிரப்பப்படும் வாயு குறித்த செய்தி வெளியாகி உள்ளது... சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத ஒரு சில அமெரிக்க நிறுவனங்கள் காப்புரிமை பெற்று இருக்கும் ஒரு வாயுவை குளிர்சாதனபெட்டியில் நிரப்புவத்தின் மூலம் புவி வெப்பமயமாவதை தடுக்க போவதாக அமெரிக்க அரசு கிளம்பி உள்ளது...

இதை நாடாளுமன்றமும் பாராளுமன்றமும் விவாத பொருளாக்கி பல்வேறு அமைச்சர்கள் முதற்கொண்டு எதிர்த்து விவகாரத்தை முடித்து விட்ட நிலையில், யாருடைய ஆதரவும் தேவை இல்லை என்று (அல்லது எப்படி ஆதரவு வாங்குவது என்று தெரிந்து விட்டதோ) தன்னிச்சையாக 2012 இல் நடந்த ஒரு சர்வதேச மாநாட்டில் இந்த திட்டத்தை ஆதரித்து இந்திய பிரதமர் கையெழுத்திட்டிருக்கிறார்.. இதனை தொடர்ந்து அனைத்து குளிர்சாதன பெட்டிகளிலும் இந்த வாயுவை நிரப்பி விற்கும் சட்டத்தை அமுல்படுத்துமாறு அமெரிக்கா நம் இந்திய அரசின் குரல்வளையை நெரிக்கிறது...


இரு பெரும் தேசிய கட்சிகளும் இவ்விஷயத்தில் எந்த வித்தியாசமும் காட்டுவதில்லை... எதிர்கட்சியை இருக்கும் பொழுது எதிர்ப்பதும் ஆளுங்கட்சியை இருக்கும் பொழுது நடைமுறை படுத்துவதும் தான் வரலாறு காட்டும் செய்தி... 


கூடங்குளம் மட்டுமே இதில் விதிவிலக்கு...

11.9.13

கூடங்குளம்- ஒரு அரசியல் பார்வை.... 2

முதலில் 
இரு பெரும் தேசிய கட்சிகள்..
இவர்களின் நோக்கம் என்ன?
அணு உலைக்கு ஆதரவாகவே இவர்களது நிலைப்பாடு உள்ளது ஏன்?

மேலே உள்ள கேள்விகளுக்கு பதில்

ப்ளுடோனியம்..

அணு ஆயுத தடை ஒப்பந்தம் அமுலுக்கு வந்ததில் இருந்து அதாவது 1970 க்கு பிறகு அணு ஆயுதம் தயார் செய்ய தொழிற்சாலை அமைப்பது என்பது சர்வதேச அளவில் சட்டத்திற்கு புறம்பானதாகி விட்டது... ஆகையால் அணு ஆயுதம் தயாரிக்க மின்சாரம் தயாரிக்கும் அணு உலைகள் தேவைப் படுகிறது... ஒரு அணு ஆயுதத்தின் ஆயுள் அதன் பல்வேறு கட்டமைப்பை பொறுத்து 35 வருடங்கள் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது... அப்படி பார்த்தால் 1970 க்கு பிறகு அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கும் எந்த நாடுகளிடமும் அணு ஆயுதம் இருக்கும் வாய்ப்பு இல்லை... (http://www.lanl.gov/quarterly/q_w03/shelf_life.shtml) ஆனால் இன்றும் 95 சதவிகித அணு ஆயுதங்கள் அமெரிக்காவிடமும் ரஷ்யாவிடமும் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.. 

அணு ஆயுதம் என்பது தீவிரவாதிகளின் கைகளில் விழுந்து விடக் கூடாது என்பதில் அனைத்து அரசுகளும் எச்சரிக்கையாகவே உள்ளதாக தெரிகிறது.. இணையத்தில் எதை தேடினாலும் கிடைக்கும் என்ற நம்பிக்கை அணு ஆயுதம் குறித்த முழு விவரங்களை தேடும் பொழுது தகர்ந்து விட்டது... தவறான கைகளில் இந்த அணு ஆயுதம் விழுவதை யாரும் விரும்பவில்லை என்று தெரிகிறது... 

கிடைத்த சில விஷயங்களை வைத்து பார்க்கும் பொழுது...

அணு ஆயுதத்திற்கு உதவும் ப்ளுடோனியம் தற்பொழுது இயற்கையாக கிடைப்பதில்லை...

அணு ஆயுதம் செய்ய உதவும் ப்ளுடோனியம் வகை தயாரிக்க தனி உலை அமைக்க முடியாத சூழ்நிலை..

சற்று சிரமம் உடைய வழிமுறை என்றாலும் மின்சார அணு உலைகள் உற்பத்தி செய்யும் ப்ளுடோனியத்தை வைத்து அணு ஆயுதம் செய்ய முடியும் என்று மின்சார அணு உலைகளை ஆதரிக்கும் திரு ரிச்சர்ட் கார்வின் அவரது ஆய்வறிக்கையில் தெரிவிக்கிறார்.



ஆக இந்திய நாட்டின் அணு ஆயுத தயாரிப்புக்கு அணு உலைகள் தேவை என்பதாலேயே இந்த இரு பெரும் கட்சிகளும் ஆதரிப்பதாகவே தெரிகிறது...

வேறு ஏதாவது காரணம் இருக்க முடியுமா?

அது என்ன காரணம் என்று பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்... வால்மார்ட் ஒரு சட்டத்தை கொண்டு வருவதற்காக எவ்வளவு செலவு செய்தார்கள் என்பது சூடாக விவாதிக்கப்பட்டது...
இதற்கு அமெரிக்காவில் லாபியிங் என்று கூறுவார்கள்.. லாபியிங் என்பதற்கு இணையான தமிழ் பெயர் என்ன என்பதை கூகிள் மொழிபெயர்ப்பில் உள்ளிட்டு பார்த்தால் வியப்பு தான் மிஞ்சுகிறது...
[லாபியிங் = சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவை நாடுதல்]

இதற்கு இடையில் யாராவது நம் பாதுகாப்புக்கு அணு ஆயுதம் அவசியமே என்று யோசித்தால் அவர்களுக்கான பதில் கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் உள்ளது...


10.9.13

கூடங்குளம்- ஒரு அரசியல் பார்வை....1

மீண்டும் என்னை எழுத வைக்கும் ரெவெரிக்கு என் நன்றிகள் 

திடீரென்று என் பழைய சிந்தனைகளை தூசி தட்டி பார்க்கையில் எழுத வேண்டும் என்று எண்ணி எழுத தொடங்கிய ஒரு கட்டுரை என்னை உறுத்தியது... நேரம் போதாமை ஒரு காரணம் என்றாலும் அதை அப்படியே கிடப்பில் போடவும் மனம் வரவில்லை..

இந்த கட்டுரைகள் ஒரு தொடராக வெளிவரும்... எனக்கு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் இந்த கட்டுரையின் வளர்ச்சிக்கு உதவுவேன்.. 

இந்த கட்டுரைகள் குறித்து உங்களுடைய பார்வையை எனக்கு தெரிவிக்க இங்கு எந்த வசதியும் செய்து தரப் போவதில்லை... ஆனால் உங்கள் எண்ணங்களை ஒதுக்கும் எண்ணமும் எனக்கு இல்லை ஆகையால் உங்கள் பார்வைகளை என் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விடுங்கள்... நேரம் கிடைக்கும் பொழுது உங்களுக்கு என் பதில் வரும்...

இனி தொடர் 

கூடங்குளம்- ஒரு அரசியல் பார்வை....

அரசியலில் என்று மட்டுமல்ல, அனைத்து விஷயங்களிலும் இரண்டு அரசியல் ஒட்டி கொண்டே இருக்கும்... ஒன்று வலது மற்றொன்று இடது.. வலது அரசியல் சுயநலம் சார்ந்தது, கற்பனை வளம் கொண்டது, நேர்மறையாக பார்ப்பதாக கூறிக் கொண்டு சிலரின் முதுகை வளைத்து அதன் மீது ஏறி உச்சி செல்லும்... 
இடது அரசியல் பொது நலத்தில் சுயநலம் சார்ந்தது, உண்மையை பக்க பலமாய் கொண்டது, எதிர்மறை நோக்கி கொண்டே சரியான திசையில் செல்லக் கூடியது, யார் முதுகின் மீதும் ஏறாமல் அனைவரின் தோள் சேர்ந்து சரி சமமாக நிற்க கூடியது...

சிலர் நான் இடது பக்கம் செல்பவன் என்று கூறிக் கொண்டாலும் அவன் வலது பக்கமே சவாரி செய்வதை காண முடியும்..

கூடங்குளம் போராட்டம் நிலை என்ன?

இன்னும் பத்து நாட்களில் மின்சாரம் கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் என்று தமிழக முதலமைச்சரும், நாற்ப்பது நாட்களில் மின்சாரம் உற்பத்தி ஆகும் என்று மத்திய அமைச்சரும், பதினைந்து முதல் முப்பது நாட்களில் தயாராகும் என்று அணு மின்சார துறை அதிகாரிகளும் கூறி இத்தோடு பல மாதங்கள் முடிவடைந்து விட்டது....

http://articles.economictimes.indiatimes.com/2012-05-06/news/31597557_1_kudankulam-nuclear-power-project-first-unit-second-unit

இடிந்தகரை மக்களும் மனம் துவளாமல் போராடிக் கொண்டிருப்பதையும் காண முடிகிறது. பதினோரு வருடங்களாக போராடி வரும் இரோம் ஷர்மிளாவை ஏறெடுத்து பார்க்காத மத்திய அரசு இந்த மக்களின் உண்ணாவிரத போராட்டத்தை ஏறெடுத்துப் பார்க்கப் போவதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்...

போபால் விஷ வாயுவால் பாதிக்கப் பட்ட மக்களை குறித்து கவலைபடாத இது வரை ஆட்சியில் இருந்த அனைத்து மத்திய அரசுகளும் கூடங்குளம் மக்கள் பாதிக்கப் படப் போவதை பற்றி அக்கறை கொள்ளாது என்பதும் அனைவரும் அறிந்தது தான்,,

இதற்கு நடுவில் இந்த போராட்டத்தை வைத்து யார் யார் என்ன என்ன அரசியல் செய்கிறார்கள் என்று ஒரு சிறிய பார்வையே இந்த தொடர்....

26.3.12

'ஓ' போடு

ரெவெரி யின் பதிவில் இருந்த ஒரு  சுட்டியை தட்டி படித்துக் கொண்டிருந்த பொழுது கீழ்கண்ட அருமையான பின்னூட்டத்தை படிக்க நேர்ந்தது...

கீதப்ப்ரியனுக்கு ஒரு 'ஓ' போடுகிறேன்...


தினமலம் இந்த மலம் அள்ளும் அம்மாவைப் பற்றி எழுதவில்லையே?
உதயகுமாரை ஒரு தீவிரவாதி போல சித்தரிக்கும் புறம்போக்குத் தாயோளிகள் இந்த இழிநிலையை ஏன் எழுதவில்லை,பொறுக்கி நாதாரிகள்.

அனுக்கழிவுகளை அமெரிக்காவில் 2கிமீ ஆழத்தில் வேர்ஹவுஸ் போல அமைத்து சுமார் 100 வருடத்துக்கு சேமிக்கிறார்களாம்,அவர்களுக்கு சந்தனம் மிஞ்சினால் குண்டியில் தேய்ப்பார்கள்,இங்கே மலத்தை தானே தேய்க்க வேண்டியிருக்கிறது,இது பெரும்பானமையான மலக்காடு தானே?தேச அவமானம்.

சோலார் பேனல்கள் அல்லது மாற்று மின் தயாரிப்பு அமைக்கப்பட்டு தானே மின்சாரம் தயாரித்துக்கொள்ள துப்பு இருக்கும் ஆட்கள் வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் தொழிற்சாலைக்கும் தான் புதிதாக கட்டிட அனுமதி,குடிநீர் அனுமதி,என் ஓ சி, போன்றவைகளை தருவோம்,என்று சொல்ல துப்பு இல்லை,அணு உலையே தான் வேணுமாம்,தூத்தேரி

வாரன் ஆண்டர்சனும் தெரியாது பேரன் ஆண்டர்சனும் தெரியாது,ஏனையோருக்கு தலைக்கு மேல் ஃபேன் ஓடினால் போதும்,யாரின் சமாதிமேலும் கூட உடலுறவு கொள்ளக்கூடிய ஜென்மங்களுக்கு.வயிற்றெரிச்சல்ப்பா..இதை அப்படியே ஆஃபீஸில் பகிர்வேன்.

23.3.12

இன்குலாப் ஜிந்தாபாத்!

மாபெரும் போராளியின் வளர்ச்சியை முடக்குவதாக எண்ணி, ஒரு பெரிய ஆலமரத்தின் விதையை இந்த இந்திய மண்ணில் ஊன்றிய நாள் இன்று..

ஆம் பகத் சிங் அவர்களின் நினைவு நாள்...

எந்த போராட்ட உணர்வுக்கும் மரியாதை கொடுக்கத் தெரியாதவர்கள் தான் வலது சாரிகள், ஆனால் இங்கு இடது சாரிகள் என்று கூறிக் கொள்பவர்கள் கூட கூடங்குளத்தின் போராட்ட உணர்வுக்கு மரியாதை செலுத்த தவறி விட்டார்கள்.. விளைவு குற்ற உணர்ச்சி...

12 வருஷத்திற்கும் மேலாக உண்ணா விரதம் இருந்து இந்திய நாடு போற்றும் அகிம்சா வழி போராட்டத்தின் வாயிலாக போராடும, மணிப்பூர் ஷர்மிளாவின் போராட்டத்தை குறித்தே கவலைப் படாதவர்கள் கூடங்குள மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்க போவதில்லை என்பது கண்கூடு...

போராட்டங்களை அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்குவது புதிதில்லை, இடது சாரிகளின் ஆட்சியில் கூட நந்திகிராமம் இரும்புக் கரம் கொண்டு தான் அடக்கப் பட்டுள்ளது. ஆனால் அந்த எழுச்சி, அந்த உணர்வு என்றும் தோயாது.

இந்த வாரம் frontline  இதழில் வெளியான கட்டுரையை படித்து அணு சக்தியின் இன்றைய நிலைமை குறித்து அறிந்து கொள்ளுங்கள்..
http://www.frontlineonnet.com/stories/20120406290610300.htm

அணு சக்தியை ஆதரிக்கும் அனைத்து இடது சாரிகளுக்கும், பகத் சிங் அவர்களின் வார்த்தைகளை இங்கு முன் வைக்கிறேன்...

"அதிகார வர்கத்திடம் ஜாக்கிரதையாக இருங்கள். அது உங்களுக்கு ஒரு நாளும் உதவி செய்யாது. மாறாக அது உங்களை பகடைக் காயை போல் பயன்படுத்தும். நீங்கள் சுதந்திரம் இல்லாமல் இருப்பதற்கும் உங்களது வறுமைக்கும் மூல காரணம் இந்த அதிகார வர்க்கமும் முதலாளி வர்க்கமே. எனவே அவர்களை ஒரு போதும் நம்பாதீர்கள்."

இன்குலாப் ஜிந்தாபாத்!

21.3.12

Fight Nuclear Disaster Campaign

கூடல் பாலா நேற்று தொலைபேசியில் உரையாடினார்,
இன்று வைரை சதீஷ் தொலைபேசியில் உரையாடினார் 

விரிவான கட்டுரை நாளை அல்லது மறுநாள் எழுதுகிறேன்...

சதீஷ் ஒரு தொலைபேசி நம்பரை கொடுத்து, அந்த எண்ணை தொடர்பு கொள்ளச் சொன்னார்.

08030088529

அணு சக்திக்கு எதிரான போராட்டங்களுக்கு உங்கள் ஆதரவை தெரிவிக்க இந்த எண்ணை தொடர்பு கொண்டால், அவர்கள் உங்கள் ஆதரவை பதிந்து கொள்கிறார்கள். பிறகு உங்களுக்கு கீழ் கண்ட விதம் ஒரு குறுஞ்செய்தியை அனுப்புகிறார்கள்.

Thanks for your support, but we are going to need a lot more people to win against nuclear disasters. To get all your friends, family and colleagues to also help, just miscall 08030088529. we will send you a personal hotline number that you can share with them for the next 2 hours. Thanks a million.

நான் அந்த எண்ணை தொடர்பு கொண்ட பொழுது அவர்கள் இந்த வசதி ப்ச்ன்ல் தொலைபேசிக்கு வழங்கப் படவில்லை என்ற தானியங்கி செய்தி ஒளிபரப்பாகியது.. ஆனால் மேற்கூறிய குறுஞ்செய்தி வந்து சேர்ந்து விட்டது.. இதற்காக எந்த கட்டணமும் என் தொலைபேசியில் இருந்து பிடித்தம் செய்யவில்லை என்பது குறிப்பிடத் தக்கது...

13.3.12

வெளிச்சம் தரும் சில காப்பீடுகள்

காப்பீட்டு நிறுவனங்கள் எங்கே எதை காப்பீடு செய்யலாம் என்று தான் சுற்றி வருகின்றனர்... சிறு வயதில் ஒரு நடிகை தன மூக்கை காப்பீடு செய்ததை எண்ணி சிரித்திருக்கிறேன்... அணு உலை விவாதங்கள் உச்சத்தில் இருக்கும் நேரத்திலும், இது வரை யாருமே எடுத்து வைக்காத முக்கியமான கோணத்தை இங்கு என் நண்பரான ஒரு காப்பீட்டு முகவருடன் நடந்த விவாதங்களில் சிலவை மூலம் இங்கு ஒரு பேட்டி போல் உங்கள் முன் வைக்கப் படுகிறது.. [சில சமயங்களில் ஆங்கில வார்த்தைகள் கலக்க கூடாது என்பதற்காக கொஞ்சம் இலக்கியத் தமிழாக உரை நடை மாறும்.. பொறுத்துக் கொள்ளுங்கள் தோழர்களே]

நண்பர்:  பாலிசி போடு, பாலிசி போடுன்னு நானும் கரடியா கத்துறேன், நீயும் தப்பிச்சுகிட்டே வர... மார்ச் வருது, எனக்கும் டார்கெட் முடிக்கணும், நீயும் வருமான வரி கணக்கு கட்டனும் அதனால ஒரு நல்ல பாலிசி சொல்றேன். போடு.

நான்:      பாலிசி போடுறேன். ஆனா நான் கேட்க்கும் கேள்விக்கு எல்லாம் நீ கரக்டா பதில் சொல்லணும். எங்கேயாவது தெரியல, புரியல அப்படின்னு நழுவிடலாம்னு பார்த்தா, பொலிசியும் நழுவிடும்.. சரியா?

நண்பர்: இது என்னடா திருவிளையாடல் நாகேஷ் கணக்கா இருக்கு... சரி கேட்டு தொலை.. முயற்சி பண்றேன்.

நான்:      இப்ப நான் வந்து ஒரு அணு உலையில் வேலை செய்வதாய் வச்சுக்குவோம்.   அப்ப எனக்கு நீ பாலிசி போடுவியா.

நண்பர்: போடுவோம். ஆனா நீ அடுத்து அடுத்து என்ன கேக்கப் போறன்னு தெரியுது. அதனால் இதோட நிறுத்திக்கலாமே.

நான்:      ஆட்டம்னு வந்துட்டா ஆடிடணும் தலைவரே. இப்படி ஜகா வாங்க கூடாது.

நண்பர்: சரி மேலே கேளு...

நான்:       accident benefit rider வேணும் என்றால் போலிசி யில் இடம் இருக்கிறதா...

நண்பர்: இருக்குப்பா, ஆனா அது வெறும் வண்டியில் செல்லும் போது நிகழும் விபத்துக்கு மட்டும் தான்...

நான்:      ஒரு வேலை அணு உலை விபத்தால் பாதிக்கப் பட்டு, கதிரியக்கப் பாதிப்பால் எனக்கு புற்றுநோய் வந்ததாக மருத்துவர் சான்றிதழ் வாங்கி தந்தாள் எனக்கு விபத்து காப்பீடு கிடைக்குமா?

நண்பர்: இதுக்கு நீ நேரடியாவே கேட்டிருக்கலாம்.. அணு உலை விபத்தால் நீ பாதிக்கப் பட்டால் அது விபத்தால் பாதிக்கப் பட்டதாக எடுத்துக் கொள்ளப் படாது..

நான்:      ஏன்?

நண்பர்: ஏன் என்றால், முன் கூட்டியே நடக்கும் என்று தீர்மானிக்கப் பட்ட ஒன்றுக்கு காப்பீடு என்று ஒன்று கிடையாது தோழர்.

நான்:     அப்படி என்றால் அணு உலை விபத்து என்பதே நடக்காது என்று கூறுவது...

நண்பர்: இந்த கேள்வியை என்னிடம் கேட்கக் கூடாது, யார் சொல்றார்களோ அவர்களிடம் கேட்க வேண்டும். ஆனால் காப்பீடு நிறுவனங்களை பொறுத்தவரை  அணு உலை என்பது விபத்துக்கு உள்ளாகும் என்று தான் கணக்கில் வைத்திருப்பதாக எனக்கு படுகிறது...

நான்:      சரி சரி, இதுக்கு மேல ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டுக் கொள்கிறேன்...

நண்பர்: தப்பிச்சுட்டேன்

நான்:      பெருமைப் படாதே... முக்கியமான கேள்வியே இது தான்..

நண்பர்: சரியாப் போச்சு..

நான்:      அணு உலைக்கு அருகே உள்ள வீட்டுக்கு நான் காப்பீடு எடுக்க முடியுமா?

நண்பர்: ஆஹா... நீ கடைசியில் அங்க வரியா?

நான்:      முதல்ல இருந்தே அங்க தான் வரேன்...

நண்பர்: எடுக்கலாம்பா..

நான்:      ஒரு வேளை அணு உலை விபத்துக்கு உள்ளாகி என் வீடு கதிரியக்க வளையத்தில் சிக்கி இருந்தா என் வீட்டுக்கு.. காப்பீடு கிடைக்குமா?

நண்பர்: நீ காப்பீடு பண்ண வேணாம்... என்னை ஆளை விடு... 

நான்:     டேய், டேய் பதிலை சொல்லிடுடா...

நண்பர்: உன் வீடு கதிரியக்க பாதிப்புக்குள் சிக்கிடுச்சுன்னா உனக்கு இழப்பீடு கிடைக்காது... ஆனா பூகம்பத்தால் அணு உலை விபத்து நிகழ்ந்தால், இயற்கை பேரிடரால் உன் வீடு பாதிக்கப் பட்டதாக அதுக்கு நீ இழப்பீடு பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அந்த நேரத்தில் காப்பீட்டு நிறுவனங்கள் அந்த இடத்துக்கு சேதாரத்தை ஆராய எப்படி செல்வார்கள் என்று தெரியாது... ஆகையால் இந்த கேள்விக்கு வரும் ஆனா வராது என்று தான் பதில் சொல்ல முடியும்..

நான்:     ஒரு வேளை இயற்கை அழிவு இல்லாமல் மனித தவறால் விபத்து நேர்ந்தால்...

நண்பர்: போடாங்க... நீயும் உன் காப்பீடும்...

நான்:      அதை நான் சொல்லணும்...

தனி நபர் காப்பீட்டில் உள்ள அணு உலை விபத்து குறித்து அறிந்து கொள்ள

வீட்டு காப்பீடு குறித்து அறிந்து கொள்ள

12.3.12

11-03-2011 to 11-03-2012

நேற்று ஜப்பான் அணு உலை விபத்து நடந்த நாள்...
அதை ஒட்டி  கூடல் பாலா, மழை காகிதம் ஒரு பதிவு இட்டிருந்தார்கள்...
சில பல தகவல்கள் அதில் இருந்தாலும் பெரும்பாலான தகவல்கள் அதில் இல்லை..

ஆஸ்திரேலிய இயற்பியல் விஞ்ஞானி ஒருவரின் கட்டுரை ஒன்று பல கேள்விகளை முன் வைத்து அணு சக்தி குறித்து தெளிவாக்குகிறார்...
http://theconversation.edu.au/fukushima-anniversary-reminds-us-there-are-better-options-than-nuclear-5806

ஜப்பானில் நடந்த விபத்து குறித்து அனைத்து தகவல்களும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்ற எண்ணத்தில் தான் நான் இருந்தேன்...

ஆனால் என் எண்ணம் தவறு என்று வீடு சுரேஷும், சூனிய விகடனும் நிரூபித்து விட்டார்கள்.. ஜப்பானில் உள்ள மக்கள் கூட பயப் படவில்லை என்ற ரீதியில் இருவரும் பேசி உள்ளனர்...

இதே எண்ணத்தில் பலரும் இருக்கக் கூடும்...

ஜப்பானில் இனி அணு உலைகளே நிறுவப் படக் கூடாது என்று சுமார் அறுபதாயிரம் மக்கள் டோக்கியோவில் செப்டம்பர் மாதம் போராடி உள்ளனர்
http://mg.co.za/article/2011-09-19-thousands-protest-against-nuclear-power-in-japan/

அணு உலை விபத்துக்கு பொறுப்பேற்று அந்நாட்டு பிரதமர் ராஜினாமா செய்துள்ளார்..
http://www.progressive.org/japan_kan_resigns.html 

விபத்தை சந்தித்த அணு உலைக்கு அருகே எந்த விதமான கதிர்வீச்சும் இல்லை என்று நிரூபிக்க நடுங்கும் கைகளுடன் ஜப்பான் அமைச்சர் ஒருவர் அந்த பகுதியில் இருந்து கொண்டு வந்த சுத்திகரிக்கப் பட்ட நீரை குடித்து மக்களுக்கு நம்பிக்கை ஊட்டினார்... இதை ஒரு நாடகமாக தான் ஜப்பான் ஊடகங்கள் கூறுகின்றன..
http://www.guardian.co.uk/world/2011/nov/01/japanese-mp-drinks-water-fukushima

மொத்தம் உள்ள ஐம்பத்து நாலு அணு உலைகளில் வெறும் இரண்டே அணு உலைகள் தான் ஜப்பானில் இயங்கி கொண்டு இருக்கின்றன.. மீதம் உள்ளவை பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ளது... அந்த இரண்டு அணு உலைகளும் கூட விரைவில் மூடப் பட்டு, தொழிற் சாலை முதலாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப அனைத்தும் முன்பு போலவே இயங்கத் தொடங்கும் என்பது அங்குள்ள ஊடகங்களின் செய்தி தொகுப்பு..
http://www.deccanchronicle.com/channels/world/asia/japan-says-possible-all-reactors-shut-summer-234

அதிலும் இந்த ஐம்பத்து நாலு அணு உலை இயங்கினாலும் அது ஜப்பானின் மின் தேவையில் வெறும் இருபத்தி ஐந்து சதவிகிதமே பூர்த்தி செய்கிறது என்பது கூடுதல் தகவல்.

எந்த நாட்டுடனும் இந்தியாவை ஒப்பிட்டு கூற நான் முடிவெடுக்க வில்லை...

ஜப்பான் குறித்து நம் தோழர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் இது அவ்வளவே...

ஆபத்து வந்தால் இந்தியாவால் சமாளிக்க முடியாது என்று எண்ணுகிறீர்களா என்று கேள்வியும்  எழும்புகிறது..
அப்படி கேள்வி கேட்பவர்கள், என் பழைய பதிவான ஒன்றின் சுட்டியை தருகிறேன்..
வெறும் புகைப்படங்களை மட்டுமே பார்த்து நீங்கள் முடிவு செய்துக் கொள்ளலாம்..
http://suryajeeva.blogspot.in/2011/11/uranium.html 

2.3.12

நாங்களும் கேப்போமில்ல?

கூடங்குளத்தின் போராட்டம் ஏற்படுத்தியுள்ள விவாதம் போல் எந்த போராட்டமும் இது வரை ஏற்படுத்தியதில்லை என்றே கூறலாம்...

எட்டு மணி நேரம் முதல் பத்து மணி நேர மின் தடையை சந்திப்பதால் வரும் எரிச்சல் சிலருக்கு கூடங்குளம் திறந்தே ஆக வேண்டும் என்று பேச வைக்கிறது... மத்திய அமைச்சர் நாராயணசாமி முழு உற்பத்தியான ஆயிரம் மெகா வாட்டை தமிழகமே வைத்துக் கொள்ளட்டும், ஆனால் கூடங்குளத்தை திறக்க தமிழக அரசு முன் வர வேண்டும் என்ற ரீதியில் பேசி இருக்கிறார்...

ஜைதாபூரில் அணு உலை திறக்கக் கூடாது என்று போராட்டக் குழு அமைத்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல்வாதிகள் கூடங்குளம் திறக்கப் பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்...

இந்தியா சுதந்திரம் அடைய வேண்டும் என்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடிய அனைவரும், அத்தனை காலம் போராட யாரிடம் பணம் வாங்கினார்கள் என்று சிந்தித்து பார்த்தால், காங்கிரஸ் தியாகிகள் கூடங்குள மக்கள் வெளிநாட்டினரிடம் கை நீட்டவில்லை என்று உணர்ந்து கொள்வார்கள்...

லஞ்சம் கொடுப்பது தவறு என்று கூறும் நம் முன்னாள் ஜனாதிபதி அந்த பகுதி மக்களுக்கு இருநூறு கோடி ரூபாய்க்கு திட்டங்களை முன் வைத்து தாஜா செய்கிறார்..

அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு சர்வதேச கழகத்தின் கண் கொத்தி பார்வையில் இருக்கும் பொழுதே இரானின் அணுமின்சார உற்பத்திக்கு ஆப்பு அடிக்கும் சர்வதேச வளர்ந்த நாடுகள், இந்தியாவை பிற்காலத்தில் எப்படி எல்லாம் ஆட்டி வைக்கப் போகிறது என்பதை சிந்தித்துப் பார்க்க யாரும் தயாராய் இல்லை...

சுய சந்தோஷத்திற்காக பொது மக்களின் வாழ்க்கையில் சிகரெட் புகையை ஊதித் தள்ளும் ஒருவன் கூட , தன் வீட்டருகில் அமைக்கப் பட்டுள்ள செங்கல் சூளைக்கு எதிராக போர்க்கொடி தூக்குகிறான்...செங்கல் சூளை என்பது அணு உலை விட ஆபத்தானதா என்ன?

பயத்தின் அரசியல் என்று சிலர் வாய் சவடால் காட்டி தங்களை வீரர்களாய் காட்டிக் கொள்கிறார்கள், தன்னால் வாழ முடியாது என்ற பயம் தான் ஒருவனை போராடவே வைக்கிறது என்பதை போராளிகளின் போர்வையில் இருக்கும் சிலரும் மறந்து விடுகிறார்கள்...

மீனவர்களை குறித்து சூனிய விகடன் பல கேள்விகள் கேட்டார்... அதற்கு ஒரே பதில் தான் என்னிடம் உள்ளது...

அனைவரும் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள், மீன்களின் கூட்டமும், விலங்குகளின் கூட்டமும் கருவறுக்கப் படாது...

மிருகங்களின் வாழ்வாதரத்துக்காக கவலைப் படுபவர்கள் மனிதனை குறித்து கவலைப் படுவதில்லை என்று எங்கோ படித்த கவிதை தான் நினைவுக்கு வருகிறது.

சர்வதேச கடல் எல்லையில் மீன் பிடித்தால் எந்த தொல்லையும் இல்லை என்று சூனிய விகடன் எந்த நேரத்தில் சொன்னாரோ தெரியவில்லை, அதுவே இத்தாலிக்கும் இந்தியாவுக்கும் பெரிய பிரச்சினையாகி உள்ளது..

கூடங்குள மக்களின் உணர்வில் அணு உலை எதிர்ப்பு என்பது படிந்து விட்டது. அது படிமமாக மாறாது...  எங்கு அணு உலை போராட்டம் நடந்தாலும், என்னைப் போல் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு ஆதரவு அளிக்கத் தவற மாட்டார்கள் என்று அந்த மக்களை சந்திக்காமலே என்னால் கூற முடியும்.

அணு உலை ஆதரவாளர்களுக்கு நான் கேட்க்கும் சில கேள்விகள்...

நீங்கள் ஆயிரம் கேள்விகள் கேட்டீர்கள், நாங்கள் அனைத்திற்கும் பதில் சொன்னோம்...

நாங்கள் சில கேள்விகள் கேட்கிறோம்...
பதில் சொல்லுங்கள்..

அணு உலைக்கு அருகில் இருக்கும் வீடுகளுக்கு ஏன் எந்த காப்பீட்டு நிறுவனமும் காப்பீடு செய்ய முன் வருவதில்லை?

அணு உலையில் வேலை செய்யும் நபர்களுக்கு ஏன் கதிர்வீச்சு பாதிப்பை விபத்து காப்பீடாய் ஏற்பதில்லை?

ஒரு அணு உலை கட்ட ஆகும் ஆண்டுகளின் உழைப்பையும்,  பல்லாயிரக் கணக்கான கோடி பணத்தையும் ஏன் சூரிய ஒளியில் தயாரிக்கும் மின்சாரத்தில் அரசு முதலீடு செய்வதில்லை?

அப்படி அது சாத்தியமில்லாத ஒன்று என்றால் எப்படி லாபம் நோக்கு மட்டுமே உடைய தனியார் நிறுவனங்கள் சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் தயாரிக்க முன் வருகிறார்கள்? அவர்களிடம் இருந்து மின்சாரத்தை வாங்குவது யார்?

சூரிய ஒளி மின்சாரத்தை தயாரிக்க அரசு கொடுக்கும் மானியத்தில் அரசே இதை அமைக்காதது ஏன்?

வழக்கம் போல் தலையை சுற்றி மூக்கை தொடும் பதில்களை தான் தருவீர்கள் என்பது தெரிந்தே கேட்கிறோம்... பதில்கள் எங்களுக்கு தேவை இல்லை... புழுக்கத்தில் உட்கார்ந்து இருக்க விரும்பாத உங்கள் சுயநல புத்திக்கு உரைத்தால் போதுமானது..

அநீதிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன, அவற்றை எதிர்த்து போராட்டங்களும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன... அநீதிகள் வென்று விடுவதால் அதை எதிர்க்கும் நேர்மை தோற்று விடுவதாய் அர்த்தம் இல்லை... அநீதியை எதிர்த்து கேள்வி கேட்ட வீரம் எங்களுக்கு போதுமானது...

வேலை பளு அதிகம் உள்ளதாலும், எட்டு மணி நேர மின் தடையில் அமர்ந்து இருப்பதாலும்  அநேகமாய் இந்த மாத இறுதியில் தான் என்னால் வழக்கம் போல் வலையில் உலா வர முடியும் என்று எண்ணுகிறேன்.. அது வரை அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

10.2.12

இணையும் கரங்களின் சத்தம்

 அது என்னவோ சூனிய விகடனார் வந்தால் ஏதாவது பதிவு போட வைத்து விடுகிறார்...

கூடங்குளம் போராட்டம் என்பது ஒரு பெரிய வரலாறு...

இந்த போராட்டம் தொடங்கிய கால கட்டமான 80  களில் ஆரம்பித்து எண்ணற்றவர்கள் இந்த போராட்டத்தில் ஐக்கியப் படுத்திக் கொண்டு செயலாற்றிக் கொண்டு வருகிறார்கள்...

ஒரு தனி நபரை சார்ந்து இந்த போராட்டம் இல்லை, அது அந்த பகுதி மக்களின் எண்ணத்தில் ஆழ்ந்து ஊறி விட்டது...

எத்தனையோ கைகள் அந்த போராட்டத்தை தட்டிக் கொடுத்தபடி சத்தத்தை அதிகரித்தப் படி உள்ளனர்...

இந்த போராட்டம் வெற்றி பெறுமா? பெறாதா என்ற கேள்விக்கு எல்லாம் உள்ளே செல்லாமல்...

இந்த புரட்சி தீ என்றென்றும் போராடும் அனைத்து உள்ளத்திலும் கனன்று கொண்டிருக்கும் என்று மட்டுமே கூற முடியும்...

frontline  ஆங்கில இதழில் வெளியான, புகுஷிமா அணு உலை விபத்தை நேரில் சென்று ஆய்வு செய்து, இன்று அதன் நிலைமை என்ன என்று கூறும் கட்டுரையை படிக்க கீழ் உள்ள சுட்டியை சொடுக்கவும்..


இந்த போராட்டம் என்பது அறிவியலை எதிர்ப்பதால் பிற்போக்கு தனமானது என்று கூறும் உள்ளங்களுக்கு, பகத் சிங்கின் கட்டுரைகளை படியுங்கள் என்று மட்டும் கூறிக் கொள்கிறேன்...
இன்குலாப் ஜிந்தாபாத்

2.2.12

நம்பிக்கை

இறைவன் என்ற பிம்பத்தின் மீது நம்பிக்கை வைத்து, தன்னையே நம்ப மறுக்கும் ஒரு குழு... 

தன் மீது நம்பிக்கை வைத்து இறைவன் என்ற பிம்பத்தை நம்ப மறுக்கும் ஒரு குழு..

இங்கு கேள்வி எல்லாம் நம்பிக்கை மீது மட்டுமே...

ஒருவன் கடவுள் இருக்கிறான் என்று நம்பி, அதை குறித்து மைக் செட் எல்லாம் வைத்து பிரச்சாரம் செய்தால் கடவுளை  மறுப்புவர்கள் எதிர்வாதம் மட்டுமே புரிகிறார்கள்...

அதையே ஒருவன் கடவுள் என்ற பிம்பம் இல்லை என்று பிரச்சாரம் செய்தால் கடவுள் என்ற பிம்பத்தின் மீது நம்பிக்கை உள்ளவனோ, கடவுள் மீது நம்பிக்கை இல்லாமல் கடவுளை காப்பாற்ற அடி தடியில் களம் இறங்குகிறான்...

மதம் பிடித்த மனிதனுக்கு கருத்து சுதந்திரம் பிடிப்பது இல்லை... ஆனால் கருத்து சுதந்திரத்தை முழு மனதாக கைக்குள் வைத்திருக்கும் வலை உலகில் பதிவாக எழுதும் நம் தோழர்களை அடி தடியில் ஒடுக்கி விட முடியாது...

எங்கள் நம்பிக்கையை கேள்வி குறியாக்கி எங்கள் மனதை புண்படுத்தாதீர்கள் என்று கடவுள் என்ற பிம்பத்தை நம்புபவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள்...

கடவுள் என்ற பிம்பம் இல்லை என்ற எங்கள் நம்பிக்கையை நீங்கள் கேள்வி குறியாக்கும் பொழுது நாங்கள் எங்கு சென்று முறை இடுவது?

அடிபட்ட நமது தோழரின் வலைபூ..

23.1.12

கூடங்குளம் to கொவ்வாடா

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் அமைய உள்ள கொவ்வாடா அணு உலைக்கு ஆரம்பத்திலேயே எதிர்க்க ஆரம்பித்து உள்ளார்கள் அந்த பகுதி விவசாயிகளும் மீனவர்களும்....

இது அமெரிக்க அரசின் உதவியுடன் நிறுவப் படும் அணு உலை என்பதால் நமது பிரதமர் கண்டிப்பாக எப்பாடு பட்டாவது இதை நிறுவ பாடு படுவார்...

சுமார் ஒரு லட்சம் கோடி செலவில் கட்டப் படும் இந்த அணு உலையானது எப்பொழுது செயல் படத் தொடங்கும் என்று தெரியவில்லை...

கூடங்குளம் பற்ற வைத்த புரட்சி தீ நாடு முழுவதும் அணு உலைகளை நிறுவவதில் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை...

கூடங்குளம் அணு உலை திறக்கப் பட்டால் மின்சாரப் பற்றாக்குறையே இருக்காது என்று கூறுபவர்கள், கூடங்குளம் அணு உலையில் வேலை செய்யும் தொழிலாளிகளை வைத்து சங்கம் அமைத்து ஆட்சியை பிடிக்க கனவு காண்பவர்கள் எவ்வளவு சுய நல வாதிகள் என்பதை இந்த உலகம் கண்டு கொண்டது என்பது மட்டும் உண்மை...


[மார்ச் மாதம் இறுதி வாரம் வரை வேலை பளு இருப்பதால் பதிவு எழுத முடியவில்லை... பிறர் வலைப் பூக்களுக்கும் வர முடியவில்லை... மன்னிக்கவும்... எதையாவது எழுது என்று தூண்டிய சூனிய விகடன் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்..]

கூடங்குளம் போராட்ட பூமியில் இருந்து நேரடி அனுபவத்தை தொகுக்கும் தோழர்.ரெவெரியின் பதிவை படிக்க...

ராஜபாட்டை ராஜா அவர்களின் கேள்விக்கு கீழ் உள்ள சுட்டியில் பதில் உள்ளது, பார்த்துக் கொள்ளவும்...

7.1.12

மருத்துவ வியாபாரம்

சென்ற பதிவில் மருத்துவர்கள் நடத்தும் போராட்டத்தை விமர்சித்ததற்கு ஒரு மருத்துவ தோழர், தவறான தகவல்களை அளிப்பதாக தெரிவித்துள்ளார்...

என் வலைப்பூவில் மருத்துவம் என்ற தலைப்பில் உள்ள கட்டுரையில் எந்த வியாதிகளுக்கும் நல்ல மருத்துவர்களை சென்று பார்ப்பது தான் ஒரே வழி என்று பல இடங்களில் நான் கூறி இருப்பேன்..

எட்டு ஆண்டுகள் நான் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்துள்ளேன்... சுமார் ஆயிரம் மருத்துவர்களை சந்தித்துள்ளேன்... அதில் என்னால் நூறு மருத்துவர்களை மட்டுமே மிகவும் சிறந்த மருத்துவர்கள் என்று கூற முடியும்...

காஞ்சிபுரம் சார்ந்த வெங்குடி மருத்துவமனையை சார்ந்த மரு.ரிஷிகேஷ் அவர்கள் என்றும் என் பட்டியலில் முதலிடத்தில் இருப்பார்...

ஆனால் பல மருத்துவர்களுக்கு அலட்சியம் என்பது உடன் பிறந்தது என்பது போல் நடந்து கொள்கிறார்கள். சினிமா விலும் ஊடகங்களிலும் கொஞ்சம் மிகைப் படுத்தி சொல்லப் பட்டாலும்... அவர்கள் கூறுவதில் பத்து சதவிகித உண்மை எப்பொழுதும் இருக்கும்...

மருத்துவர்களின் சுரண்டல்களை குறித்து புரிந்து கொள்ள நான் எதுவும் தனியாக எழுதி தெரிய வேண்டும் என்று இல்லை... ஏற்கனவே விகடனில் தொடராக வந்த போஸ்ட் மோர்டேம் என்ற புத்தகம் இன்றும் விகடன் பிரசுரத்தால் தனி புத்தகமாகவே கிடைக்கும்... இதை எழுதியவர் ஒரு மருத்துவர் என்பதால் பலர் இதை பற்றி எந்த கருத்தும் சொல்ல மாட்டார்கள்... ஆனால் ஊடங்கங்கள் பொறுப்பாக நடந்து கொள்வதில்லை என்று மட்டும் குறை கூறுவார்கள்.. பொறுப்பான ஊடகமாக செயல் படும் எத்தனையோ வலைபூக்களில் வெளி வருவது எல்லாமே மிகைப் படுத்தப் பட்ட செய்திகள் அல்ல... மாறாக உண்மைகளே இங்கு பதியப் படுகிறது...

இப்பொழுதும் கூறுகிறேன்,
தவறான சிகிச்சை முறையால் ஒரு உயிர் இழந்ததற்கு அந்த மருத்துவரை கொலை செய்வது மட்டுமே நீதியாகாது... ஆனால் நம் நாட்டு சட்ட திட்டங்கள் தவறான சிகிச்சை புரியும் மருத்துவர்களுக்கு எந்த வித தண்டனையும் வழங்குவதில்லை...

அதே சமயம் ஒவ்வொரு மருத்துவருக்கும் காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோருவதை எந்த வகையில் சேர்த்துக் கொள்வது... உண்மையில் இது சாத்தியமா? ஏற்கனவே மருத்துவமனை கண்ணாடி உடைப்பதற்கும், மருத்துவமனையில் கலாட்டா செய்வதற்கும்  கடுமையான தண்டனைகள் சட்டத்தில் இருக்கும் பொழுது, மருத்துவர்கள் எதிர்பார்ப்பது என்ன? ஒவ்வொரு மருத்துவமனைக்கும் காவல்துறை பாதுகாப்பா?

உங்கள் போராட்டத்தால் சிகிச்சை கிடைக்காமல் ஒரு கர்ப்பிணி பெண் இறந்து போனதற்கு மருத்துவர்களிடம் ஏதாவது வருத்தம் உள்ளதா? கண்டிப்பாக இல்லை...

தமிழ் நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் கூறுகிறார், கொலை செய்யப் பட்ட மருத்துவர் எந்த விதத்திலும் சட்டத்தை மீறவில்லை என்று... உங்களிடம் சில கேள்விகள் கேட்கிறேன்....

MBBS படித்த மருத்துவர்கள் சிறு அறுவை சிகிச்சை செய்யவே பயிற்சி அளிக்கப் பட்டுள்ளார்கள். அப்படி இருக்கும் பொழுது ஒரு ஆபத்தான நிலைமைக்கு சென்று கொண்டிருந்த ஒரு நோயாளியை அந்த மருத்துவர் காப்பாற்ற முயற்ச்சிக்கிறேன் என்ற வகையில் செய்து இருக்க வேண்டியது ஒன்றே ஒன்று தான்... அது இன்னும் சிறந்த உபகரணங்களும், சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்களும் உள்ள ஒரு அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைப்பதே ஆகும்... அதை செய்யாதது அந்த மருத்துவரின் அலட்சியம் மட்டும் அல்ல, பெரிய அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுத்தது சட்டத்திற்கு புறம்பான செயல் அல்லவா?

ஒரு அரசு மருத்துவராக பணி புரியும் ஒருவர் வெளியில் எந்த வித மருத்துவமனையிலும் பணி புரிய கூடாது என்றும் தனியாக கிளினிக் நடத்தக் கூடாது என்பது சட்டம். அந்த சட்டத்தை மதிக்காமல் நடந்து கொண்டது சட்டத்திற்கு புறம்பான செயல் என்பது மட்டும் அல்ல, சட்டம் ஒன்றும் செய்யாது என்ற அலட்சியமும் தெரிகிறது அல்லவா?

உண்மைகள் வெளியில் தெரியவில்லை என்று மாற்றுக் கருத்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்...
மருத்துவரை கொலை செய்தது காட்டு மிராண்டி தனமானது என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்..
மேலும் ஒரு மருத்துவர், இறந்த மருத்துவர் DGO  படித்தவர் என்ற தவறான தகவலை கொடுத்து உள்ளார்...

முதன் முதலில் உண்மைகள் வெளியில் தெரியவில்லை... வேலை நிறுத்தத்தை ஆதரித்த மருத்துவர்கள் சட்டத்திற்கு புறம்பாக அந்த மருத்துவர் செய்த செயல்களை வெளியில் தெரிவிக்காமல் தங்கள் பாதுகாப்புக்கு வழி தேடினார்கள்... ஆனால் இப்பொழுது தெரிகிறது...

மருத்துவரை கொலை செய்தது காட்டு மிராண்டி தனமானது என்று ஏற்றுக் கொள்கிறேன்...
ஆனால் ஒரு மருத்துவரின் அலட்சியப் போக்கால் ஒரு நோயாளி இறந்தால் அதுவும் காட்டு மிராண்டி தனமானது தான்..

மருத்துவர்களும் மனிதர்கள் தானே என்ற வாதமும் வைக்கப் படுகிறது,
மருத்துவர்களும் மனிதர்களே அவர்கள் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளும் வரை...

பணத்திற்கு மனசாட்சியை அடகு வைப்பவர்களை நான் மருத்துவர்கள் என்ற வரையறைக்குள் வைப்பதில்லை மாறாக அவர்களுக்கு வேறு பெயர் உள்ளது

அது வியாபாரி ....

http://imaapstate.blogspot.com/2010/12/can-mbbs-doctor-do-surgery.html

http://blogs.emedinews.in/?p=1477

இறந்த நோயாளி ரத்த உறைவு தன்மை குறையும் தன்மை உள்ள HELLP  SYNDROME  நோய்க்கு ஆட்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.. அந்த நோயை குறித்து தெரிந்து கொள்ளவும், கீழே ஒரு சுட்டியை அளிக்கிறேன்...
http://www.nlm.nih.gov/medlineplus/ency/article/000890.htm

5.1.12

போராட்டங்களை கொச்சைப் படுத்தும் போராட்டம்

மருத்துவர்களின் வேலை நிறுத்தம் என்பது ஏனைய மக்களின் போராட்டங்களை கொச்சைப் படுத்தும் வகையில் அமைந்துள்ளது...

ஒரு மருத்துவர் கொலை செய்யப் பட்டது வருத்தம் தரும் விஷயமாக இருந்தாலும், நாட்டில் நடக்கும் ஒவ்வொரு கொலைக்கும் வேலை நிறுத்தம் எந்த வகையிலும் தீர்வு ஆகாது...

இலவசமாக அரசு மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க முடியும் பொழுது ஒவ்வொரு அரசு மருத்துவரும் தனியாக மாலை நேரங்களிலும், பலர் அரசு வேலை நேரங்களிலும் தனியாராக இயங்கி மக்களிடம் இருந்து பணம் சுருட்டுவது இயல்பாகவே உள்ளது...

அரசு மருத்துவர்கள் வெளியில் தனியாராக வேலை செய்யக் கூடாது என்று சட்டம் இருந்தும், அரசும் அரசு மருத்துவர்களும் ஒருவொருக்கொருவர் காப்பாற்றும் முயற்ச்சியில் இந்த சட்டத்தின் கண்கள் கருப்பு துணியால் கட்டப் பட்டு குருடாக்கப் படுகிறது...

ஒவ்வொரு ஊழியரும் வேலை நிறுத்தம் என்பதை கடைசி ஆயுதமாகவே பயன்படுத்துகின்றனர்...

ஒவ்வொரு வேலை நிறுத்த நாளும் ஒரு நாள் சம்பளத்தை தியாகம் செய்வதால், வேலை நிறுத்தம் என்பதற்கு ஒரு மரியாதை இருந்தது...

இந்தியாவிலேயே மிகவும் குறைந்த சம்பளம் வாங்கும் தமிழக அரசு மருத்துவர்கள், ஒரு நாள் சம்பளம் போனால் போகட்டும் மாலையில் எங்கள் கிளினிக் தரும் வருமானத்திற்கு ஈடாகுமா என்ற எண்ணம் தான் இந்த போராட்டத்தின் மூலம் தெரிய வருகிறது...

தாங்கள் சார்ந்த சங்கத்தின் கோபத்தினை ஏற்றுக் கொள்ள விரும்பாத சில மருத்துவர்கள் வேண்டா வெறுப்பாக கலந்து கொண்டதை எண்ணிப் பார்த்தாலும், இதை கூட எதிர்க்க முடியாமல் நீங்கள் என்ன சம்பாதித்துக் கிழித்து விடப் போகிறீர்கள் என்று தான் கோபம் வருகிறது...

மருத்துவர்கள் தங்கள் கடமையை சரியாக செய்தாலே போதும், எந்த அசம்பாவிதமும் நடக்காது..

மருத்துவர்களின் அலட்சிய போக்கு நோயாளியின் உயிரை எடுத்துக் கொண்டிருந்த காலம் போய், அதுவே ஒரு மருத்துவரின் உயிரையும் பறித்திருக்கிறது என்பதை உணர்ந்து இனியாவது மருத்துவர்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்களா?

1.1.12

தானே

தானே புயலின் கொடூரத்தை காண கீழே சுட்டவும்...
The Hindu : States / Tamil Nadu : Cyclone Thane: the aftermath

தானே புயலின் சீற்றத்தை தமிழகம் கண்டது, இந்த வருட புத்தாண்டு கொண்டாட்டத்தை பல இடங்களில் தடை செய்து இருக்கிறது...

கடலூர் மாவட்டத்தில் மின்சாரமும், தொலைத்தொடர்பும் துண்டிக்கப் பட்டு மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்...

பால் விநியோகம் தடை பட்டதை அடுத்து பொருளாதார நிபுணர்கள் கூற்று [demand fix the price] எவ்வளவு அசிங்கமானது என்பது போல், ஒரு லிட்டர் பால் ஐம்பது ரூபாய்க்கு விற்கப் படுகிறது...

சுனாமியை விட கொடுமையானதாக இருந்ததாக வீடிழந்த மீனவ மக்கள் பயத்துடன் நினைவு கூறுகிறார்கள்...

இதன் அடிப்படையில், இயற்க்கை சீற்றம் குறித்து நம் பார்வை மாற வேண்டும்..

ஐந்து நாட்கள் முன்னதாக புகுஷிமா விபத்து நடந்ததை விசாரித்த குழுவினர், தங்கள் அறிக்கையில், இவ்வாறு தெரிவித்து உள்ளனர்..

சுனாமியில் உருவாக்கப் பட்ட அலைகள் இருபது அடிக்கு மேல் வராது என்ற யூகத்தில் தடுப்பு சுவர் எழுப்பியதால் இந்த விபத்து நடந்ததாக கூறி உள்ளனர். கற்பனைக்கு எட்டாத வகையில் இயற்க்கை சீற்றம் இருந்ததாகவும்... இனி வரும் காலங்களில் கற்பனைக்கு எட்டாத வகையில் கற்பனை செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் பாடம் கற்றுக் கொண்டதாக அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது...

அணு உலை விவகாரத்தில் எத்தனையோ இயற்க்கை சீற்றங்கள் குறித்து எழும் அச்சத்தை புறந்தள்ளும் அணு உலை ஆதரவாளர்கள், புயல் சீற்றத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு சிந்திக்க வேண்டும்.

ஆங்கில புத்தாண்டு புதிய கோணத்தில் பிரச்சினைகளை சந்திக்க நமக்கு கற்றுத் தரட்டும்...

31.12.11

2011 லிருந்து 2012...

கடைசி இரு வாரங்கள்...
நாடகத்தின் உச்ச கட்டம் அரங்கேறிய நாட்கள்...

கூடங்குளம் குறித்து பிரதமர் உறுதி.

கூடங்குளம் கண்டிப்பாக திறக்கப் படும் என்றும், ஏதாவது ஆபத்து என்றால் ரஷ்ய நிறுவனம் பொறுப்பேற்காது என்றும் பிரதமர் கூறியதும்..

முல்லைப் பெரியாறு விவகாரம்.

இரு மாநில மக்களின் ஒற்றுமையை குலைத்த சங்கதி, காங்கிரஸ் நிர்வாகிகளிடமே ஒற்றுமையை குலைத்த விவகாரம், பல்வேறு பிரச்சினைகளை மக்களின் மனதில் இருந்து நீக்கிய சமாச்சாரம்

லோக் பால் மசோதா.

ஊழலை ஒழிக்க சட்டம் கொண்டு வருவது என்பது, திருடனை கூப்பிட்டு காவலுக்கு உட்கார வைப்பது போன்றது என்று உணர்த்திய நிகழ்ச்சி... தனக்கு தேவையான சரத்து லோக் பால் மசோதாவில் உள்ளது என்று தெரிந்ததும், உண்ணாவிரதத்தை கைவிட்ட அண்ணா ஹஜாரே.. காங்கிரஸ் அரசின் கையாலாகா தனத்தை தோலுரித்து காட்டிய நள்ளிரவு நாடகங்கள்.

மன்னார்குடி குடும்பத்தினர் நீக்கம்.

நகமும் சதையுமாக இருந்த உடன்பிறவா சகோதரிகளின் பிரிவு, ஏன் என்று எழுந்து நிற்கும் கேள்வியுடன் மொத்த பிரச்சினைகளும் மறந்த நிலை.

எதிர்பார்ப்புடன் தொடங்கிய ஆண்டு, அலைக்கற்றை ஊழல் புயலில் சிக்கி, தமிழகத்தில் தானே புயலில் முடிந்திருக்கிறது...

அடுத்த ஆண்டிலும் எந்த வித மாறுதலும் இருக்க போவதில்லை என்று அறிவு சொன்னாலும், நம்பிக்கை தானே வாழ்க்கை என்று புத்தி சொல்கிறது...

ஆகவே ஆங்கில புத்தாண்டை இனிதே வரவேற்று முடிந்த வரை தோய்வில்லாமல் மீண்டும் எழுத முயற்ச்சிக்கிறேன் என்று உறுதி சொல்கிறேன்...

14.12.11

இடுக்கியும் இடிந்தகரையும்

கூடங்குளம் போராட்டமும், முல்லைப் பெரியார் அணை போராட்டமும் ஏறக்குறைய ஒரே அடிநாதம் கொண்டது தான்...இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை, பூகம்பம் வந்தால் என்னாகும் என்ற பயம் தான்...


இடிந்தகரையும் சரி, இடுக்கியும் சரி  பூகம்ப சோன் மூன்றில் தான் வருகின்றன...

இரண்டு இடத்திலுமே பூகம்பம் ஆறு ரிக்டர் அளவுக்கு மேல் வந்தால், மனித உயிர் இழப்பு என்பது அபிரிமிதமாக இருக்கும்...

[இடுக்கியில் பாதிப்பு வராது என்று கூறுபவர்களுக்கு - ஆறு ரிக்டருக்கு மேல் பூகம்பம் வந்தால், முல்லை பெரியாறு அணை மட்டும் அல்ல... இடுக்கி அணையும் உடைய வாய்ப்புள்ளது என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன். விவசாய சங்க தலைவர் ஒருவர் கேட்டதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன், கேரளா அரசு கட்டப் போகும் அணை மட்டும் பூகம்பம் வந்தால் இடியாதா?]

அப்துல் கலாம் அவர்கள் கூடங்குளம் பகுதியில் பூகம்பம் வரவே வராது என்று ஆரூடம் சொன்னார். மேலும் ராஜ ராஜன் கட்டிய அணையே இன்னும் வலுவாக இருக்கிறதே என்று மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட்டார்...

விஷயம் என்ன என்றால்,

நேற்று அப்துல் கலாம் அவர்கள், முல்லைப் பெரியாறு அணையை பலப் படுத்த ஆலோசனை கூறி உள்ளார்... இது சரியான ஆலோசனையாக இருந்தாலும், கூடங்குளத்திற்கு ஒரு பார்வை என்றும்... முல்லைப் பெரியாறுக்கு ஒரு பார்வை என்றும் இருப்பது நியாயமா?

இடிந்த கரையில் பூகம்பம் ஆறு ரிக்டருக்கு மேல் வராது என்றால் இடுக்கியிலும் ஆறு ரிக்டருக்கு மேல் வரப் போவதில்லை..

எப்பொழுதோ கட்டிய கல்லணை பலமாக இருக்கிறது என்றால், அதற்க்கு பிறகு கட்டிய முல்லை பெரியாறு அணை கூட பலமாக தானே இருக்கும்...

இவ்வளவு பேசிய அப்துல் கலாம் அவர்கள் நதிநீரை இணைப்பது குறித்தும், ஆறுகளை தேசிய மயமாக்குவது குறித்தும் பேசி இருக்கலாம்.. [இன்று மாலை வெளியான செய்திக் குறிப்பில் இந்த ஆலோசனையையும் குறிப்பிட்டுள்ளார், அப்துல் கலாம் அவர்கள்]

இடுக்கியில் பாதிப்பு வந்தால் இப்பொழுது வாழ்பவர்களுடன் உயிரிழப்பு முடிந்து விடும்.. கூடங்குள பகுதியிலோ தப்பி பிழைத்தவர்களும் இனி பிறக்கப் போகிறவர்களும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்பதை மீண்டும் நினைவுப் படுத்துகிறேன்.

மக்களின் பயத்தை போக்க அப்துல் கலாம் கூறிய ஆலோசனை பரிசீலிக்கப் பட வேண்டியது தான்.. அதே நேரத்தில் கூடங்குள மக்கள் போராட்டத்தையும் கலாமை ஆதரிப்பவர்கள் பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள் என்று கூறிக் கொள்கிறேன்.

உச்ச நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவால் சிறிது நாட்கள் நாம் மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்தலாம் என்பது தான்  நிதர்சனம்...

http://tamil.oneindia.in/news/2011/12/13/tamilnadu-army-can-maintian-protect-dams-kalam-writes-pm-aid0128.html

http://www.mapsofindia.com/maps/india/seismiczone.htm