politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

12.8.11

நீதியின் முன் கடவுள்...

இந்திய சுதந்திர மண்ணில் ராஜாங்க முறை ஒழித்துக் கட்டப் பட சுதந்திரம் வாங்கிய பிறகு சுமார் 24 வருடங்கள் [1971] காத்திருக்க வேண்டியதாகியது... முதன் முதலில் 1969 இல் ராஜாங்க முறை ஒழித்துக் கட்டப் பட வேண்டும் என்று கொண்டு வரப்பட்ட சட்டம் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடிக்கப் பட்டது என்பது நம் மக்கள் பிரதிநிதிகள் மேல் இந்த ராஜாக்கள் எப்படி அதிகாரம் செலுத்தி உள்ளனர் என்பது புலனாகிறது.. 

ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு சோம்பேறித் தனமாய் வாழ்க்கை நடத்தி வந்த ஒருவனுக்கு திடீர் என்று உழைத்து சாப்பிட வேண்டும் என்று கூறியதும் கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்திருக்கும்... ஆனால் நம் வரலாறை நாம் திரும்பி பார்த்தால் ஒரு கரடியிடமிருந்து சிக்கி தப்பித்து வெளி வந்த பின் வேறு ஒரு கரடியிடம் சிக்குவதை தான் வழக்கமாய் வைத்திருக்கிறோம்... ஆகையால் ராஜாக்களாய் வாழ்ந்த இவர்கள் பிற்பாடு அதே பெயரில் பெரும் செல்வந்தர்களாய் வாழ்ந்தார்கள் என்பது தான் சரியானது... இதில் பல ராஜாக்கள் ராஜ் வாழ்க்கை வாழ்வதாய் எண்ணி தன் பிள்ளைகளை ஏழைகளாக்கி விட்டு சென்றார்கள் என்பது தனிப்பட்ட சோக கதை... 

ஆனால் இந்த ராஜாக்களை காப்பாற்ற என்றும் உறுதுணையாய் இருந்தது ஆண்டவன் என்ற அடைமொழியும், துதிபாடும் புரட்டுக்காரர்களும் தான்... அறிவியல் வளர்ந்த பிறகும் ஜாதகம் பார்ப்பதை ஒரு அறிவியல் பாடதிட்டமாய் ஒரு அரசு கொண்டு வந்த பொழுது இப்படி பட்ட பொய் கலந்த கல்வி முறை தான் அரசை காப்பாற்றுகிறது என்பது வெளிச்சமாகிறது... 

அவ்வகையில் திருவனந்தபுரத்து கோயிலில் இருக்கும் நகை கணக்கெடுப்பில் ராஜாவை ஒரு தர்மசங்கடத்தில் இருந்து காப்பாற்ற ஜோசியர்களை வரவழைத்து நாடகம் ஆடுகிறார் திருவனந்தபுரத்து மகாராஜா என்ற பெயரில் வாழும் செல்வந்தர்... அவர் வாழ்வதற்கு அந்த கருவறையில் இருக்கும் நகைகளும் பணமும் தான் உதவுகிறது என்ற எண்ணத்தை ஊர்ஜிதப் படுத்துகிறது ஜோசியர்கள் கூறியிருக்கும் பொய்...

ரத்தம் கக்கி சாவாய் என்று மயில் சாமி சொல்லும் பொழுதும், பரவாயில்லை காசோடு தான் சாவேன் என்று வடிவேல் சொல்வது போல் ஆகிவிட்டது உச்ச நீதிமன்றத்தின் நிலைமை...

ஆன்மீகத்தின் மீது எனக்கு வெறுப்பும் கேள்விக்கணைகளும் வரக் காரணமே இது போன்ற பயமுறுத்தல் தான்.. 
தாயை போன்ற கருணை உள்ளதாக நீங்கள் கூறும் கடவுள் தன் பிள்ளைகள் செய்யும் தவறிற்கு தண்டனை தருவான் என்று கூறுவது ஏற்றுக் கொள்ள முடியவில்லை... 
அனைத்து செய்கைகளுக்கும் கடவுள் தான் காரணம் என்று கூறிவிட்டு, பூட்டை திறக்க சொல்வதும் கடவுள் தான் என்று மறுப்பது முரணாக உள்ளது... இப்படி நீங்கள் எது சொன்னாலும் உங்கள் ஆன்மீகத்திலேயே இதற்கு  முரணாக பதில் இருக்கிறது என்பதை மறந்து விடாமல் கொஞ்சம் சீரியசாக பேசுங்கள்...
உங்கள் பேச்சு காமெடியாக எடுத்துக் கொண்டால் உங்கள் பொழப்பு சிரிப்பாய் சிரிச்சுடும் என்பது தான் உண்மை..

இதற்கு உச்ச நீதிமன்றம் என்ன சொல்லப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்...

இந்து நாளிதழில் இந்த செய்தியை படித்தவுடன் வந்த கோபம் அந்த செய்திக்கு பின்னூட்டம் எழுதிய அனைவரின் பதிலையும் படித்தவுடன் அணைந்து போனது.. அனைவரும் அந்த ஜோசியக்காரர்களை திட்டி தீர்த்து இருக்கிறார்கள்...