politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

14.8.11

இன்குலாப் ஜிந்தாபாத்...

விக்கிபீடியா வில் உள்ள தகவல் படி 2009 தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வோட்டு சதவிகிதம் 28 .6 % தான். ஆக பெரும்பான்மையான 71 .4 % மக்கள் காங்கிரஸ் வரக்கூடாது என்று வாக்களித்தனர்.. ஆனால் இங்கு எத்தனை பேர் வெறுக்கிறார்கள் என்று பார்ப்பதில்லை, எத்தனை பேர் ஆதரிக்கிறார்கள் என்று தான் பார்க்கிறார்கள்... ஆகையால் நான்கில் ஒரு பங்கு உள்ள மக்கள் போட்ட ஓட்டால் மீதி உள்ள மூன்று பங்கு மக்கள் அவதிப்படுகின்றனர்... இதை தான் ஜனநாயகம் என்று கூறிக் கொள்கின்றனர்...

அப்படி பட்ட ஜனநாயகப்படி தேர்ந்து எடுக்கப் பட்டவர்கள் என்ன தவறு செய்தாலும் தேர்ந்து எடுத்துவர்கள் கேள்வி கேட்கக் கூடாது.. அப்படி கேள்வி கேட்டால் அது ஜனநாயகத்திற்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகும்... ஐந்து வருடம் இவர்கள் தான் ஆள வேண்டும் என்று நீங்கள் அவர்களை  அனுப்பிவிட்டு பின்னால் முதுகில் குத்துவது எந்த விதத்தில் நியாயம்... அப்படி குத்துவதற்கு அவர்களே உங்களுக்கு கத்தியும் எடுத்துக் கொடுப்பார்கள் என்று நம்புவது மடத்தனமில்லையா?

நாங்கள் தப்பு தான் செய்கிறோம், இங்கு யார் தான் தப்பு செய்யவில்லை என்று கேள்வி கேட்கும் அளவுக்கு செய்வது தப்பு என்றே தெரியாத அளவுக்கு தப்பு வளர்ந்துள்ளது.. கேள்வி கேட்கும் ஜனங்கள் கூட யார் அதிக தப்பு செய்துள்ளார்கள் என்று நீதியின் தராசில் எடை போட்டு தீர்ப்பு அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.. இந்த முறை குறைந்த அளவு தப்பு செய்தவர்கள் ஆட்சி அமைக்க வழி கிடைக்கிறது... தப்பு செய்கிறவன் அதிகாரத்தில் உட்காருவதால் தப்பை நீதியாக்குகிறான்.. வீட்டு வரி கட்ட முடியாதவனை ஜப்திக்கு இழுக்கும் அரசு, பல்லாயிரக் கணக்கான கோடிகளில் வரி கட்டாத ஹசன் அலியை தாம்பாள தட்டில் தாங்கி வளர்க்கிறார்கள்...

அண்ணா ஹஜாரே போன்றவர்கள் கூட தப்பு செய்யும் ஆணிவேரை நோக்கி கல் எறியாமல் எங்கோ எறிந்து கொண்டிருக்கிறார்,

தப்பு செய்யவே, பிரதமரை லோக் பால் மசோதாவுக்குள் கொண்டு வரக் கூடாது என்று காங்கிரஸ் கூறுகிறது..
தப்பு செய்யவே, அரசு அல்லாத அமைப்புகளை லோக் பால் மசோதாவுக்குள் கொண்டு வரக் கூடாது என்று அண்ணா ஹஜாரே கூறுகிறார்..

இது போதாதென்று உலகின் கட்டப் பஞ்சாயத்து தலைவர் இந்திய அரசுக்கு எல்லா விஷயத்திலும் அறிவுரை கூறுவது போல் எண்ணி குட்டையை குழப்புகிறார்...

போராட்டம் என்பது ஒரு விளம்பர யுக்தியே ஆகும்.. அனைவருக்கும் தெரிய வேண்டும் என்று தான் போராடுகிறோம்.. யாருமே வராத இடத்தில் போராட அனுமதி பெறுவதற்கு அவரவர் வீட்டிலேயே உக்கார்ந்து போராடலாமே..
ஊழலை ஒழிக்க தேவை இன்னும் ஒரு சட்டம் அல்ல, மாறாக மக்களை பற்றி சிந்திக்கும் அரசு.. அப்படி பட்ட அரசு அமைய அனைவரும் ஒரே கருத்துக் களத்தில் நிற்க வேண்டும். அதற்கு இணையத்திலும் இதழ்களிலும் எழுதி விழிப்புணர்வு கொடுங்கள், படித்த உடன் பாராட்டி பின்னூட்டம் போடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் இணையம் பக்கமே வராத ஒரு ஐந்து பேரிடம் இதை பற்றி விவாதம் செய்தால் தான் முழு விழிப்புணர்வு வரும்...

ஆகையால் ஈவிரக்கமற்றவர்களிடம் சுதந்திரம் வாங்கி இன்னொரு ஈவிரக்கமற்றவர்களிடம் நம் சுதந்திரத்தை அடகு வைத்ததை... மீட்டு எடுப்போம்.. என்று நம் அனைவரின் வாழ்விலும் விடியல் வருகிறதோ அன்று தான் நமக்கு உண்மையான சுதந்திர நாள்.. அது வரை நாம் கூற வேண்டிய வார்த்தை வந்தே மாதரம் அல்ல...

இன்குலாப் ஜிந்தாபாத்...
புரட்சி ஓங்குக...