இந்திய மக்களை காப்பாற்ற போராடினாரா அல்லது அரசு சாரா அரசு அல்லாத அமைப்புகளையும் பெரும் நிறுவனங்களையும் காப்பாற்ற போராடினாரா என்று பெரும் விவாதம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் மிகவும் அமைதியாக சென்றது இரு செய்திகள்..
அமர்ஜீத் என்ற பதினெட்டு வயது கடிகாரம் பழுது பார்க்கும் இளைஞன் போராட எடுத்த வழி தற்கொலை...
http://www.expressindia.com/latest-news/90-per-cent-burns-but-he-still-mumbles-anna-zindabad/836816/
தூக்கு தண்டனைக்கு காத்திருக்கும் மூன்று பேரின் தண்டனையை நிறுத்தி மன்னிப்பு வழங்குமாறு தமிழகத்தை சேர்ந்த பல்வேறு குழுவினரும் போராடிக் கொண்டிருக்கும் பொழுது , காஞ்சிபுரத்தை சேர்ந்த செங்கொடி போராட தேர்ந்தெடுத்த ஆயுதம் தற்கொலை..
முத்துக் குமரன் என்ற இளைஞன் தற்கொலை என்ற ஆயுதத்தை கையில் எடுத்து போராடி தியாகி என்று இந்த சமூகத்தால் பட்டம் சூட்டப் பட்டு சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளுக்கு ஒரு சிறந்த ஆயுதமாக விளங்குகிறார்...
போராடும் குணம் கொண்ட மக்கள் இங்கு குறைவு,
ஒருவன் போராடினால் அதை வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம், அதை பற்றி பேச ஒரு கூட்டம், தார்மீக ஆதரவு தரும் கூட்டம், அவனுடன் சேர்ந்து நிற்கும் ஒரு கூட்டம்... தனி மரம் தோப்பாகாது என்று வழக்கு மொழி உண்டு, ஆனால் ஆப்பாக முடியாது என்று எந்த மொழியும் இல்லை..
கங்கை நதியை சுத்தப் படுத்த வேண்டும் என்று உண்ணா விரதம் இருந்த நபர் இறந்த பிறகே ஊடகங்களின் பார்வையில் சிக்குகிறார்...
மணிப்பூரில் உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கும் இரோம் ஷர்மிளாவை இன்னும் பல ஊடகங்கள் அண்ணாவை பிரபலப் படுத்தியது போல் எடுத்துக் காட்டாததால் வரலாற்றின் இருண்ட பக்கங்களில் வெளிச்சத்திற்கு வராமல் இருக்கிறார்..
இப்படி வாழ்க்கையில் போராட்டம் என்பது இன்றியமையாததாக போராடி உயிர் நீத்தவர்கள் வரலாற்றின் பக்கங்களில் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர்...
ஆனால் போராடும் துணிவு இல்லாமல் இது போல் தற்கொலை ஆயுதத்தை எடுத்து போராடுவது என்பது கோழைகள் எடுக்கும் வீரமான முடிவு என்ற அர்த்தத்தில் தான் பதிவாகும்...
சமுதாயம் கழிவிரக்கம் காரணமாக இப்பொழுது அவர்களை தியாகியாக்கி போற்றலாம்..
ஆனால் வரலாற்றின் பக்கங்களில் அவர்கள் தியாகிகள் என்ற பக்கத்தில் இருக்க மாட்டார்கள், கோழைகள் என்ற பக்கத்தில் தான் இருப்பார்கள்...
உங்களுடன் போராட எவரும் இல்லை, என்று எண்ணாதீர்கள்...
உங்கள் போராட்டம் உடனே முடிவு தரவில்லை என்று அவசரப் படாதீர்கள்..
நீங்கள் ஒரு தீக்குச்சி, உரசுங்கள் அது பற்றிக் கொள்ளும்...
அதை விட்டு விட்டு நீங்களே பற்றி கொள்ளாதீர்கள்... போராட்டம் உங்களுடன் சாம்பலாகி விடும்...
நீங்கள் போராட இந்த உலகில் இன்னும் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள்..