அணு உலைக்கு எதிராக பல்லாயிரம் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்து விட்டது. அணு உலைக்கு ஆதரவாகவும் சில குரல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் எழத்தான் செய்கிறது.
அவற்றில் பல சாமானிய மக்களுக்கு புரியாத வண்ணம் இருப்பதால், ஆதரவு நிலை எடுப்பதா, எதிர்ப்பு நிலை எடுப்பதா என்று யோசித்துக் கொண்டிருப்பவர்களை குழப்பவே செய்துள்ளது.
அது போன்ற சுவாரசியமான உண்மைகளை மறைத்து, உண்மை போல் தெரியும் அணு உலை ஆதரவு கட்டுரையை படித்து விட்டு , உண்மையை தேடி அலைந்து மேலும் அதிர்ச்சிகர தகவல்களை தெரிந்து கொண்டேன்.. அவை உங்கள் பார்வைக்கு..
கதிர்வீச்சு...
இருவகை
ஒன்று அயனியாக்கும் கதிர்வீச்சு
மற்றொன்று அயனியாக்காத கதிர்வீச்சு
அயனியாக்காத கதிர்வீச்சு microwave ஓவன், அலைபேசிகள் போன்றவைகளில் இருந்து வருபவை. அவ்வளவு அபாயகரம் அல்லாதவை.
அணு உருவாக்குவது அயனியாக்கும் கதிர்வீச்சு, அவற்றை பற்றி தான் பேசப் போகிறேன்..
இயற்கையில் கலந்திருக்கும் கதிர்வீச்சுக்களில் முக்கியமானதும், பெரும்பான்மையாகவும் இருப்பது radon என்னும் வாசமில்லா நிறமில்லா வாயு. அணு உலைகளில் உபயோகிக்கப் படும் uranium கழிவுகளில் இருந்து பிறக்கும் வாயு இது. இயற்கையில் கலந்திருக்கும் கதிர்வீச்சில் ஐம்பது விழுக்காடு இதுவே ஆக்கிரமித்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் ஒரு ஆண்டுக்கு இந்த வாயுவின் பாதிப்பால் சராசரியாக 21 ,000௦௦௦ நபர்கள் நுரையீரல் புற்றுநோய் தாக்கி பலியாகின்றனராம்.
இந்த ராடன் வாயுவால் பாதிக்கப் படுபவர்கள் பெரும்பாலும் ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் தான், இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவும் அந்த பட்டியலில் இணைந்து கொண்டிருக்கிறது என்று விக்கிபீடியா தெரிவிக்கிறது.
எக்ஸ்ரே க்களில் பயன்படுத்தப்படும் கதிர்வீச்சு 10 rem அளவே உள்ளது. மருத்துவ துறை ஒரு ஆண்டுக்கு நூறு rem அளவு கதிர்வீச்சை ஒரு மனிதன் மேல் பிரயோகிக்க அனுமதிக்கிறது. அப்படி இருந்தும் எக்ஸ்ரே க்களில் பயன்படுத்தும் மிக குறைந்த கதிர்வீச்சு உயிரணுக்களின் மேல் ஒரு வேளை பிரயோகிக்கப் பட்டால், அந்த நேரத்தில் அந்த உயிரணுக்கள் உண்டாக்கும் குழந்தைகள் ரத்த புற்று நோயுடன் தான் பிறப்பார்கள் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
நானூறு rem களுக்கு மேல் கதிர்வீச்சு இருந்தால் மரணம் நிச்சயம் என்று குறிப்பிட்டுள்ளது..
செர்நோபில் மற்றும் புகுஷிமா வால் பாதிக்கப் பட்டவர்கள் பற்றி பேசினால் அதிகாரப் பூர்வ தகவல் உண்டா என்று கேள்வி கேட்பார்கள். இழப்பீடு தரப் பட வேண்டி வருமே என்பதாலும் இனி வரும் எதிர்ப்புகளை சமாளிக்கவும் அதிகாரப் பூர்வ தகவல்கள் என்றும் வரப் போவதில்லை. எவ்வளவு தான் இழப்பீடு கொடுத்தாலும் அனுபவிக்கும் வலியை அது தடுத்து விடப் போவதுமில்லை.
வாழ்ந்து வரும் வசிப்பிடங்களை காலி செய்து விட்டு செல்வது எவ்வளவு பெரிய வலி என்பது கள்ளிக் காட்டு இதிகாசம் படித்தவர்களுக்கும், அகதிகளாய் புலம் பெயர்ந்தவர்களுக்கும் தெரியும். அசம்பாவிதம் நிகழ்ந்து விட்ட புகுஷிமா அருகே வாழ்ந்தவர்கள் வெளியேற்றப் பட்டிருக்கிறார்கள் என்பது அனைவரும் ஒத்துக் கொள்ளும் விஷயம். அந்த வலி நமக்கும் வர வேண்டுமா?
அனைவரும் தலை வலியை அனுபவித்து இருப்போம். நம் நலனுக்காக ஒரே ஒரு முறை தலைவலியை வரவழைத்துக் கொள்ளுங்கள். நான் இழப்பீடு தந்து விடுகிறேன் என்று கூறினால், நாம் தலைவலி வரவைத்துக் கொள்ள தயாராகுவோமா அல்லது அப்படி கேட்டவர்களை எதிர்த்து போராடுவோமா?